ரூபா. 500 மில்லியனுக்கும் (ரூபா. 50 கோடி) அதிக பெறுமதியான 52 கிலோ கிராம் ஹெரோயினை கொண்டு சென்ற நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருள், துபாய்க்கு தப்பிச் சென்ற பாணந்துறையைச் சேர்ந்த சலிந்து எனும் போதைக் கடத்தலில் ஈடுபடும் நபருக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல வாரங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவாக இப்போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றையதினம் (18) அகங்கம, காலி, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய பிரதேசங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய குறித்த உப பொலிஸ் பரிசோதகர் அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம நுழைவாயிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய இருவரும் அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகரினால், ஹெரோயின் போதைப் பொருளை குறித்த இருவரிடம் வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, கைதான உப பொலிஸ் பரிசோதகர், தனது சீருடையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளின் பொருட்டு சந்தேகநபரை ஒரு வாரம் தடுத்து வைத்து விசாரணை நடாத்தும் உத்தரவை பெறவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்த காரொன்றையும், வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment