3400 ஒக்சி மீற்றர்களுடன் மூன்று பேர் கைது : இரு கார், வேன் ஒன்றும் பறிமுதல் - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

3400 ஒக்சி மீற்றர்களுடன் மூன்று பேர் கைது : இரு கார், வேன் ஒன்றும் பறிமுதல்

சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட இரத்தத்தில் ஒட்சிசன் அளவை கணிக்கும் 3400 ஒக்சி மீற்றர்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை - வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 3400 ஒக்சி மீற்றர்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கொழும்பு-12 பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஒக்சி மீற்றர்களை சுங்க சட்டவிதிகளுக்கு புறம்பாக நாட்டுக்கு எடுத்து வந்துள்ளதுடன், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபையிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளாமலே அவற்றை வைத்திருந்துள்ளதுடன், அந்த உபகரணங்களை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை, முகத்துவாரம் மற்றும் கொழும்பு-12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஒருவரிடமிருந்து 1000 ஒக்சி மீற்றர்களும், ஏனைய சந்தேக நபர்களிடமிருந்து தலா 1200 ஒக்சி மீற்றர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இந்த ஒக்சி மீற்றர்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அதற்கமைய இரு கார்களும், வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலானை மத்திய ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad