மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் - இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இதுவரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய கர்பிணிகளுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் முன்னுரிமையளிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சைனோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஏற்கனவே முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்ட அதே இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்படும்.

நாளை மறுதினம் (6) ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 9 ஆம் திகதி மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடையவுள்ளன. இதுவரையில் 11 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

இவ்வாறு எதிர்வரும் காலங்களில் கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளின் அளவிற்கமைய ஏனைய மாவட்டங்களிலும் அவற்றை வழங்கும் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்றார்.

No comments:

Post a Comment