கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த சுகாதார துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். கொரோனாவை அரசியலாக பார்க்காதீர்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (15) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று என்பது சுகாதார துறையினருடன் தொடர்புடைய ஒரு விடயமாகும். எனவே அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும். என்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை நன்கு அறிந்தவர்கள் சுகாதார துறையினர். அவர்களுடைய வழிகாட்டலில் ஏனையவர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து சுகாதார துறையினரின் வழி காட்டல்கள் இல்லாமல் இதனை கட்டுப்படுத்த முடியாது.
கடந்த காலங்களில் எங்களுடைய நாட்டில் ஏற்பட்ட பல தொற்று நோயை கட்டுப்படுத்தியவர்கள் இந்த நாட்டின் சுகாதார துறையினர் எனவே அவர்களிடம் இதனை கையளிப்பதே சிறந்தது.
நாட்டில் யுத்தம் இருந்த கால கட்டத்தில் அதனை முப்படையினரே செய்தனர். அதற்க அவர்களுக்கு ஏனைய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கினார்கள். யுத்தத்தில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளோ அல்லது அவர்களுடைய வழிகாட்டல்களோ இருக்கவில்லை. ஏனெனில் சுகாதார துறையினருக்கு யுத்தம் தொடர்பாக எதுவும் தெரியாது.
எனவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்ற பொழுது கூறிய விடயமே யாருக்கு என்ன திறமை இருக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று. ஆனால் இன்று அது தலைகீழாக நடைபெறுகின்றது.
எனவே இதனை உணர்ந்து சுகாதார துறையினரிடம் இந்த பொறுப்பை கையளித்து அவர்களுடைய வழிகாட்டலில் ஏனையவர்கள் சென்றால் மாத்திரமே இந்த தொற்றை எமது நாட்டில் இருந்து இல்லாதொழிக்க முடியும். அதனை விடுத்து சுகாதார துறையினருடன் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடுடன் நடந்து கொண்டால் இதனை கட்டுப்படுத்த முடியாது.
இந்த செயற்பாடுகளின் பொழுது நாங்கள் பாரக்கின்றோம் ஒவ்வொரு துறையினரும் மாறுபட்ட முரண்பாடான கருத்துகளை கூறி வருகின்றார்கள். சுகாதார துறையினர் ஒருவழியிலும் பொது சுகாதார அதிகாரிகள் ஒரு வழியிலும் பாதுகாப்பு பிரிவினர் ஒரு வழியிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படி சென்றால் இதனை கட்டுப்படுத்த முடியாது.
சுகாதார துறையினர் புதுவருட காலத்தில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தார்கள். அதனை அன்று செய்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதே நேரம் எங்களுடைய விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
எனவே இப்பொழுதாவது சுகாதார துறையினரிடம் முழுமையான இந்த பொறுப்பை கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விடயத்தில் அரசியல் செய்யாமல் அனைத்து கட்சிகளையும் அழைத்து கலந்துரையாடி எதிர்கட்சிகளுக்கும் ஒரு பொறுப்பை வழங்கி அனைவருடைய ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் முன்வர வேண்டும்.
ஏனைய நாடுகளிலும் அந்த நாடுகள் அவ்வாறு செயற்பட்டதன் காரமணாகவே இன்று அவர்கள் கொரோனாவை வெற்றி கொண்டுள்ளார்கள். உடனடியாக இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக நிருபர் தியாகு

No comments:
Post a Comment