உலகெங்கும் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் பயன்பாடு - தடுப்பூசி பகிர்வில் பெரும் ஏற்றத்தாழ்வு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

உலகெங்கும் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் பயன்பாடு - தடுப்பூசி பகிர்வில் பெரும் ஏற்றத்தாழ்வு

உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தொட்டிருப்பதாக சயன்டிபிக் அமெரிக்கன் என்ற இணைய செய்தி தளம் குறிப்பிட்டுள்ளது.

அவசர பயன்பாட்டுக்காக தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து நான்கு மாதங்களின் பின்னரே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி பகிர்வில் உலகில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வருவதாக போர்பஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதியன்று உலகெங்கும் 570 மில்லியன் மக்களுக்கு 1.06 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய 7.79 பில்லியன் உலக மக்கள் தொகையில் முதல் தடுப்பூசியை பெற்றவர்கள் எண்ணிக்கை 7.3 வீதமாக உள்ளது.

இதன்படி தினசரி மக்களுக்கு 18.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்படுவதோடு, இந்த வேகத்தில் தடுப்பு மருந்து வழங்கினால் உலக மக்கள் தொகையில் 75 வீதத்தினருக்கு தடுப்பூசி வழங்க இன்னும் 19 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று புளூம்பர்க் இணைதளம் தெரிவித்துள்ளது.

‘இது முன்னெப்போதும் எட்டப்படாத விஞ்ஞான அடைவாக உள்ளது. 16 மாதங்களுக்குள் புதிய வைரஸ் ஒன்றை அடையாளம் கண்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை, பல்வேறு தளத்தில் மற்றும் பல்வேறு நாடுகளில் ஒரு பில்லியன் பேருக்கு எம்மால் தடுப்பூசி வழங்க முடிந்திருப்பது நினைத்துப் பார்த்திராத ஒன்று’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், சயன்டிபிக் அமெரிக்கன் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் 87 வீதமான தடுப்பு மருந்துகள் செல்வந்த நாடுகளிலேயே வழங்கப்பட்டிருப்பதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது. 

அதன்படி செல்வந்த நாடுகளில் நான்கில் ஒருவர் குறைந்தது ஒரு தடுப்பு மருந்தை பெறும் அதே நேரத்தில் ஏழை நாடுகளில் 500 பேரில் ஒருவரே தடுப்பு மருந்தை பெற்றுள்ளார். இது தடுப்பு மருந்தின் செயல்திறன் மிக்க விநியோகத்தை வலியுறுத்துவதாக உள்ளது. 

இதில் கிடைக்கப் பெற்ற தடுப்பு மருந்துகளில் 0.2 விதம் மாத்திரமே குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad