துல்கிரிய மாஸ் ஃபெப்ரிக் பார்க் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகமானோருக்கு ஒரே தடவையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பில் சுதந்திர வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று தொழில் ஆணையாளர் நாயகம் பீ.கே. பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் கொவிட்-19 தொற்றுக்குத் தொழில் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டுமென சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பானதும் காழ்ப்புணர்ச்சியுடனும் வெளியிடப்பட்டுள்ள கருத்தை நிராகரிக்கின்றேன்.
கடந்த தினங்களில் துல்கிரிய மாஸ் ஃபெப்ரிக் பார்க் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகமானோருக்கு ஒரே தடவையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பாக தொழில் அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் விசாரணை நடத்தப்பட்டது.
குறித்த நிறுவனத்தில் தொழில் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் சுகாதாரக் குழு ஸ்தாபிக்கப்பட்டு சுகாதார வழிமுறைகள் சரியான வகையில் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதாரக் குழு வாரத்தில் ஒருமுறைகூடி ஊழியர்களின் சுகாதார நிலைமைகள் பற்றித் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தியிருந்தமையும் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோன்று முகக்கவசம் அணிதல், விசேட தொற்று நீக்கித் திரவப்பாவனை, ஆவி பிடித்தல் வசதிகள், சேவைக்கூடங்கள் மற்றும் தையல் இயந்திரங்களைத் தொற்று நீக்குதல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஊழியர்கள் மாத்திரமன்றி உயர் முகாமைத்துவப் பிரதிநிதிகளும் நோய்த் தொற்று ஆளாகியிருக்கின்றனர் எனவும் மேற்படி நிறுவனத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சுகாதாரக் குழு உருவாக்கப்படவில்லை எனவும், அதனால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அன்ரன் மார்க்ஸினால் வெளியிடப்பட்ட கருத்து எந்தவொரு அடிப்படைகளும் அற்றது என்பது தெளிவாகியுள்ளது.
தொழில் திணைக்களம் சுகாதாரக் குழுக்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆலோசனைகளைத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்கியிருப்பதுடன் இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாகத் தெளிவூட்டப்பட்டுள்ளது.
அவ்வாறே, சுகாதாரக் குழுக்கள் உருவாக்கப்படாத தொழிற்சாலைகள் தொடர்பில் தொழில் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அன்ரன் மார்க்ஸிற்கு அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அவர் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.
அரச நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமை போன்றே, தனியார் துறையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறப்புரிமையை வழங்குமாறு தொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கமைய, முதலாளிமாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகளவில் பங்களிப்புச் செய்யும் தனியார்துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மற்றும் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படவுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அனைத்துத் தொழிலதிபர்களிடமும் ஊழியர்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இச்சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்ளாமல், அனைவரும் ஒன்றிணைந்து இத்தொற்றைத் தடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரகேசரி
No comments:
Post a Comment