பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு விளக்கமறியல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரும் செங்கலடி செல்லம் சினிமா குழுமத்தின் உரிமையாளருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோகன் கடந்த 2ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகனின் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து டேக் செய்தவர்களின் பதிவுகள் எனவும் அவற்றில் அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மோகனிடமிருந்து நவீன கணினி மற்றும் கைத்தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை மோகன் பதிவேற்றியுள்ளார் எனவும் சந்தேக நபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்குட்படுத்திய போது அவர் அத்தகைய கருத்துக்களை பதிவேற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மோகனது கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்திருந்தார்.

மோகன் 74 மணித்தியாலங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படார்.

அதன் பின்னர் அவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ. இளங்கோவனினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை 05.05.2021 மோகன் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளையில் சந்தேக நபரான மோகனை 14 நாட்களுக்க விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி புதன்கிழமை 05.05.2021 உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment