ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் - பிரதமர் மஹிந்த

சிறந்த பெறுபேறுகளை பெறும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்க்கும் நிலை காணப்படுவதால் நாட்டின் அனைத்து பாடசாலைகளது ஆசிரியர்களும் அதிபர்களும் தமது பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகளுக்கு செல்வது என்பது தற்போதைய மாணவர்களின் நோக்கமல்ல எனவும், சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதிலேயே பெற்றோர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பிரிவில் அதிக மதிப்பெண்களை பெற்ற ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் மாணவர்களான நவினி ரவிஷ்கா மற்றும் பானுக விக்ரமசிங்க ஆகிய இருவரும் அலரி மாளிகைக்கு வருகை தந்து தங்களது பெறுபேறுகளை அறிவித்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நவினி ரவிஷ்கா மாணவி உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தையும், பானுக விக்ரமசிங்க மாணவன் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.

தொழில்நுட்ப துறைக்கான சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்பதற்காக அநுராதபுரம், கிளிநொச்சி, நிகவெரடிய மற்றும் இரத்தினபுரி ஆகிய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாத்திரமன்றி பிரபல பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் வருகை தருவதாக அதிபர் திரு.எம்.ஆர்.டீ.கசுன் குணரத்ன இதன்போது தெரிவித்தார்.

தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது பாடசாலை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியாகும். அங்கு 6800 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 315 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment