நாளை ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி மாவட்டத்தில் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று எச்சரிக்கை அதிகளவில் நிலவும் மாவட்டங்களைத் தெரிவு செய்து தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் தடுப்பூசியேற்றும் பணி முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கான மாவட்டங்களை இனங்காண்பதற்கான வழிமுறையொன்று பின்பற்றப்படுகின்றது. அதன் பிரகாரமே மாவட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
இதன் அடிப்படையில் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி கூறினார்.
குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதுடன், ரஷ்யாவின் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யவுள்ள 10 இலட்சம் 'சைனோபாம்' தடுப்பூசிகளை எதிர்வரும் 6ம் திகதியிலிருந்து வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment