பாகிஸ்தான் - இலங்கைக்கிடையிலான கலாசார பாரம்பரியம் மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்த இணக்கம் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

பாகிஸ்தான் - இலங்கைக்கிடையிலான கலாசார பாரம்பரியம் மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்த இணக்கம்

எம்.ஆர்.எம்.வசீம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின் போது, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், கல்வி ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியம் மற்றும் மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிக அலுவலகம் அறிவித்துள்ளது.

இதன்போது மத சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் உயர் ஸ்தானிகர் பிரதமருக்கு விளக்கியுள்ளார்.

குறிப்பாக அண்மையில் பெளத்த பிக்குகளின் பாகிஸ்தான் விஜயம் மற்றும் இலங்கை திரைப்பட தயாரிப்பாளருடன் இணைந்து பாகிஸ்தானில் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு ஆவணப்படம் தயாரிப்பு ஆகியவை குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு வழங்கும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலின் கீழ் அனைத்து துறைகளிலும் இலங்கை மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் பிரதமருக்கு உயர்ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உயர் ஸ்தானிகர் வலியுறுத்தியதோடு இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதோடு, மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக உயர் ஸ்தானிகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், துணை உயர்ஸ்தானிகர், தன்வீர் அஹமத், அக்ரஹேரா கஸ்ஸப தேரர் மற்றும் திரைப்பட , ஆவணப்பட இயக்குநர் திருமதி கௌசல்யா விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad