கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீ : எண்ணெய் கசிவுகள் எதுவும் இல்லை, மூழ்கும் வாய்ப்பும் இல்லை, சற்றேனும் சரியக்கூடவும் இல்லை - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பரவிய தீ : எண்ணெய் கசிவுகள் எதுவும் இல்லை, மூழ்கும் வாய்ப்பும் இல்லை, சற்றேனும் சரியக்கூடவும் இல்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமாக பரவி வந்த நிலையில் நேற்று 10 ஆவது நாள் மாலையாகும் போது, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் கப்பலின் நடுப்பகுதியிலிருந்து மட்டும் புகை வெளியேறி வரும் நிலையில், கப்பலை குளிர்விப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கேசரிக்கு தெரிவித்தார். 

இந்நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் குறித்த தீயணைப்பு மற்றும் சமுத்திர சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தில் பாரிய முன்னேற்றத்தை எதிர்ப்பார்ப்பதாகவும் கப்பலுக்குள் நுழைந்து பரிசோதிக்க தக்க சூழல் விரைவில் உருவாகும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் இடம்பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கப்பலில் பரவிய தீயால் கொள்கலன்களே எரிந்துள்ள நிலையில், கப்பலின் எண்னெய் தாங்கிக்கோ அல்லது கப்பலின் அடித்தளத்துக்கோ இதனால் பாதிப்பில்லை என இதுவரையிலான கண்பாணிப்புக்களில் உறுதியாக்கியுள்ளன.

'கப்பலின் மேற்பரப்புக்குள்ளும், கப்பலின் அடிப்பகுதிக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை கப்பல் மீட்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர். அத்துடன் கப்பலில் எந்த வகையிலும் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர். 

கப்பல் தீ பற்ற ஆரம்பித்த நேரத்திலிருந்து இதுவரை குறித்த கடல் நீரில் எண்ணெய் கசியவில்லை என்பதை இலங்கை கடற்படையினரும் எமக்கு உறுதி செய்துள்ளனர்.' என எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பல் நிறுவனமான எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் விஷேட அறிக்கை ஒன்றூடாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, தீ பரவலுக்குள்ளான கப்பலின் தற்போதைய நிலையில், அக்கப்பல் மூழ்குவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என கப்பல் மீட்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

'தீ பரவல் இடம்பெற்றிருந்தாலும், நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பல் சற்றேனும் சரியக்கூட இல்லை.' என இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவற்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த சரக்குக் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் மீட்பு நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினரும் அதனை உறுதி செய்தனர்.

கப்பல் தீ காரணமாக, கடலில் சேர்ந்துள்ள கழிவுகள், திரவியங்கள், கப்பலின் எச்சங்கள் தொடர்ந்தும் நாட்டின் மேற்கு கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. சிலாபம் முதல் பாணந்துறை வரையிலான கடற் பிரதேசத்தில் இதனை பரவலாக அவதானிக்க முடிந்துள்ளது.

இதனைவிட கப்பலில் இருந்து கடலில் கலந்துள்ள மைக்ரோ பொலித்தீன் துகல்கள், காலி உள்ளிட்ட தெற்கு கடற்கரையோரங்களிலும் கரை ஒதுங்கியுள்ளன.

இவ்வாறான நிலையில் கரை ஒதுங்கும் கழிவுகள், திரவியங்களை பாதுகாப்பாக உடனுக்குடன் அப்புறப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ குறிப்பிட்டார்.

'கடற் கரைகளில் இருந்து சேகரிக்கும் கழிவுகள் மூட்டைகளாக கட்டப்பட்டு கொள்கலன்களில் அடைக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இதன்போது சில வகைப்படுத்தல்களை நாம் கையாள்கிறோம். இங்கு சேகரிக்கப்பட்டுள்ள கழிவுகள் அனைத்தும் அபாயகரமான கழிவுகளாகும். அவற்றை அபாயகரமான கழிவுகள் மற்றும் இரசாயனங்களை அகற்றுதல் குறித்த செயன்முறைக்கு அமையவே முன்னெடுக்க வேண்டும். 

எனவேதான் பொருத்தமான செயன் முறை ஒன்றினூடாக இக்கழிவுகளை அழிக்க அல்லது அவற்றை மீள் சுழற்சி செய்வது குறித்த தீர்மானம் எட்டப்படும் வரை அவை இவ்வாறு கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.' என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபாயகரமான கழிவுகள், இரசாயங்களை அகற்றல் தொடர்பிலான முகாமைத்துவ பணிப்பாளர் பி அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad