கறுப்பு உடையுடன் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ள தமிழ் எம்.பிக்கள் : காரணம் இதுதான் ! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

கறுப்பு உடையுடன் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ள தமிழ் எம்.பிக்கள் : காரணம் இதுதான் !

(ஆர்.ராம்)

வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு உடையுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழின பேரவலம் நடைபெற்றதன் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்கு கிழக்கு உட்பட தமிழகம் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இம்முறை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை, நினைவு நடுகல் காணாமலாக்கப்பட்டமை ஆகியவற்றை கண்டிக்கும் முகமாகவும் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நீதி கோரும் முகமாகவுமே இவ்வாறு கறுப்பு உடையை அணிந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்குச் செல்லவுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய தரப்பினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கறுப்புடையுடன் பாராளுமன்றிற்குள் பிரவேசிப்பதற்கு தமக்குள் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதேநேரம், கடந்த சில வாரங்களாக திருமலையில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவரும், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் திருமலையிலிருந்து கொழும்புக்கு செல்லவுள்ளார்.

மேலும் 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்த மே 18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றிருக்கவில்லை.

ஆகவே இத்தகை காலமும் பாராளுமன்றில் அத்திகதிக்கு முன்னதாக அல்லது அதற்கு அடுத்த வாரமே உயிர் நீத்த உறவுகளுக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் சபையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இம்முறை குறித்த திகதியில் பாராளுமன்ற அமர்வு நடைபெறுவதால் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் கூட்டிணைந்து தமது எதிர்ப்பினை வெளியிடவுள்ளதோடு கூட்டிணைந்து அஞ்சலியையும் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment