(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து 'கிபீர்' விமானங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. தற்போது நாடு முகங்கொடுக்கும் கொவிட் நெருக்கடி நிலைமையில் 'கிபீர் 'விமானங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை அவசியமா என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் நேரடியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை விடுத்தபோதே சபையில் இருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதே. அதேபோன்றே கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
இந்நிலையில் கிபீர் விமானங்களை புதுப்பிக்க 50 மில்லியம் அமெரிக்க டொலர்கள் அல்லது ஒரு கோடி ரூபா செலவழிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் உண்மைத்தன்மை குறித்து எனக்கு தெரியவில்லை.
எனினும் ஜனாதிபதி சபையில் உள்ளார். எனவே அவரிடம் கேட்கிறேன். கிபீர் விமானங்களை புதுப்பிக்க அரசு செலவிடவுள்ளதாகக் கூறப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு செலவிடப்படவுள்ள 650 மில்லியன் ரூபாவையும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு செலவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இந்த நிதிகள் மூலம் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஒட்ஸிசன், தடுப்பூசிகள், போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியும் என்றார்.
இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, உடற்பயிற்சி கூடங்களுக்கான நிதி கொரோனா நிதியிலிருந்து பெறப்படவில்லை. அது வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி என்றார்.
No comments:
Post a Comment