இன்று கைதிகளுக்கு ஏற்படும் நிலைமை நாளை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரஜைக்கும் இடம்பெறலாம் : எச்சரிக்கும் ரில்வின் சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

இன்று கைதிகளுக்கு ஏற்படும் நிலைமை நாளை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரஜைக்கும் இடம்பெறலாம் : எச்சரிக்கும் ரில்வின் சில்வா

(எம்.மனோசித்ரா)

பொலிஸாரின் பாதுகாப்பிலுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றமை பாரதூரமானதொரு விடயமாகும். அரசியல்வாதிகள் தொடர்பான முக்கிய சாட்சிகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கான செயற்பாடாகவே இவ்வாறான கொலைகள் இடம்பெறுகின்றன. இன்று கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை நாளை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரஜைக்கும் இடம்பெறலாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா எச்சரித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயற்பட்டு தற்போது பொலிஸாரும் கேலிக்குள்ளாகியுள்ளனர். பொலிஸாரின் பாதுகாப்பில் கைதிகள் இருக்கின்றனர் என்றால் அவர்களின் உயிர் பாதுகாப்பிற்கான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தையே சாரும். இவ்வாறான நிலையில் கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்படுவதானது பாரதூரமான செயற்பாடாகும்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதை ஆதரிக்கும் வகையிலும் சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம். ஆனால் அந்த தண்டனை நீதிமன்றத்தினூடாகவே வழங்கப்பட வேண்டும். 

நீதிமன்றத்தினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கினாலும் அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்காது இவ்வாறு கைதிகளை சுட்டுக் கொல்வதானது நியாயமான விடயமல்ல.

அத்தோடு இவ்வாறான கைதிகள் தெரிந்து வைத்துள்ள பல விடயங்கள் சமூகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இந்த கொலைகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

காரணம் இவ்வாறான பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் பலர் பிரபல அமைச்சர்கள் பலருடன் தொடர்புடையவர்களாவர். எனவேதான் சாட்சிகளை மறைப்பதற்காக இவர்கள் திரைப்படங்களில் வெளியாகும் காட்சிகளைப் போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மாத்திரமே இவ்வாறு கொல்லப்படுகின்றனர். மறுபுறம் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, வழக்குகள் இரத்து செய்யப்பட்டு எவ்வித அடிப்படையும் இன்றி விடுதலை செய்யப்படுகின்றனர். 

இவ்வாறான கொலை கலாசாரம் மாற்றப்பட வேண்டும். காரணம் இன்று கைதிகளுக்கு ஏற்படும் இந்த நிலைமை நாளை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரஜைக்கும் நடக்கக் கூடும் என்றார்.

No comments:

Post a Comment