கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு? அரசு ஆதரவு கிழக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? - கேள்வி எழுப்பியுள்ள இம்ரான் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 25, 2021

கிழக்கு மாகாண ஆளுநரின் கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு? அரசு ஆதரவு கிழக்கு முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன? - கேள்வி எழுப்பியுள்ள இம்ரான்

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண கொவிட் விசேட செயலணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இக்கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொவிட் நிலைமைகள் தொடர்பாக பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் விசேட செயலணி ஒன்றை அமைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரதான அமைப்பாளர் ஒருவரும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கென தலா இருவருமாக மொத்தம் 7 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த 7 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் சமுக பிரதிநிதி இல்லை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் சமுகமும் முக்கியமானது. தற்போதைய இந்த கொவிட் அனர்த்தத்தில் அதிக பாதிப்புகளை முஸ்லிம் சமுகத்தவர்களும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் ஒன்றாவது இந்த விசேட செயலணியில் சேர்க்கப்படாமைக்கு காரணம் என்ன என்று கேட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள 6 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் எம்.எஸ்.தௌபீக், மட்டக்களப்பு மாவட்டத்தில் நஸீர் அஹ்மத், அம்பாறை மாவட்டத்தில் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, எஸ்.எம்.எம்.முஷர்ரப் ஆகியோரே இந்த முஸ்லிம் எம். பிக்களாவர்.

எனவே, அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் இந்த முஸ்லிம் எம். பிக்கள் கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த விசேட செயலணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்து என்ன சொல்லப் போகின்றார்கள் என்று கேட்க விரும்புகின்றேன்.

இப்படியான விடயங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த எம் பிக்களால் சீர் செய்ய முடியா விட்டால் இவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கி முஸ்லிம் சமுகத்துக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை சமுகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் இந்த முஸ்லிம் எம்.பிக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தம்மைத் தெரிவு செய்ய மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad