கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் நங்கூரமிட்டுள்ள எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் பெரும்பாலும் அடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.
தற்போது எந்த விதமான தீப்பிழம்புகளும் கப்பலில் இல்லை எனத் தெரிவித்த இலங்கை துறைமுக ஆணையத்தின் தலைவர் தயா ரத்நாயக்க கப்பலை சூழ புகைகள் தொடர்ந்தும் வெளிவந்த வகையிலேயே உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் சேதங்கள் மற்றும் பிற எதிர்கால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவியுள்ளதுடன் கப்பலில் இருந்து கடலில் விழும் கொள்கலன்களும் பல்வேறு பொருட்களும் கடல் அலைகளின் தன்மைக்கு ஏற்ப கரையொதுங்கின.
அதன்படி, தீ பிடித்த கப்பில் இருந்து கரைக்கு மிதந்து வருகின்ற பல்வேறு பொருட்கள் பற்றி கடற்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றதுடன் கடலோர சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழும் பாகங்கள் மிதந்து வர அதிக வாய்ப்புள்ள திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாட்டை தொடங்கியிருந்தது.
இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை தீயைக் கட்டுப்படுத்த கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment