மிருசுவில் கொலையாளி விவகாரத்தில் வீரசேகர - பொன்சேகா கடும் வாக்குவாதம் : பைத்தியக்காரன் போன்று கருத்து தெரிவிக்க வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

மிருசுவில் கொலையாளி விவகாரத்தில் வீரசேகர - பொன்சேகா கடும் வாக்குவாதம் : பைத்தியக்காரன் போன்று கருத்து தெரிவிக்க வேண்டாம்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மிருசுவில் கொலையாளியை விடுவித்தமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அண்மையில் முன்வைத்த கருத்துகளை அடுத்து அமைச்சர் சரத் வீரசேகரவிற்கும், சரத் பொன்சேகா எம்.பிக்கும் இடையில் சபையில் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மகேஸ்வரன் என்ற பயங்கரவாதியின் கதையை கேட்டு ஒரு இராணுவ அதிகாரிகளை தண்டித்ததாக அமைச்சர் வீரசேகர வாதிட, இராணுவம் என்பதற்காக பொதுமக்களை கொலை செய்வது நியாயமா என சரத் பொன்சேகா எம்.பி பிரதிவாதம் செய்தார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அமைச்சர் சரத் வீரசேகர மிருசிவில் கொலையாளிகள் குறித்து தனது கருத்தை முன்வைத்தார்.

அதன்போது, நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாத்த இராணுவத்தை அவமதிக்கும் கருத்துக்களை சபைக்குள் சிலர் முன்வைக்கின்றனர். இவ்வாறான கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்போ, விக்கினேஸ்வரனோ, பொன்னம்பலமோ கூறியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இராணுவத்தில் அங்கம் வகித்த சரத் பொன்சேகா இதனை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

மிருசுவில் கொலையாளியை விடுதலை செய்தமை தவறென அவர் அண்மையில் சபையில் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட நபர்கள் சிறையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சரத் பொன்சேகா எம்.பி, இராணுவ வீரர் என்பதற்காக அவர் கொலை செய்ய முடியாது. கொலை செய்தால் அது சுனில் ரத்நாயக்க மட்டுமல்ல நீங்களாக இருந்தாலும், கரன்னாகொடயாக இருந்தாலும் சிறையில் அடைத்து தூக்கில் ஏற்ற வேண்டும். இது இராணுவ காட்டிக்கொடுப்பு அல்ல என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் வீரசேகர, நீங்கள் பொய்யான காரணிகளை கூறி வீரராக முயற்சிக்காதீர்கள். யுத்த குற்றம் செய்திருந்தால் அவ்வாறு கூறலாம், ஆனால் செய்யாத ஒன்றுக்காக இவ்வாறான பொய்களைகூற வேண்டாம். வெளிநாட்டு டொலர்களுக்கு ஆசைப்பட்டு ஜெனிவா நேரங்களில் இவ்வாறான பொய்யாக கருத்துக்களை கூறுகின்றீர்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றரைக்கோடி ரூபாவும், மேலதிகமாக ஐந்து இலட்சத்து 27 ஆயிரம் டொலர்களும் உங்களின் பெயரில் இருந்தது என்றார்.

இதற்கு பதில் தெரிவித்த சரத் பொன்சேகா எம்.பி, ஜெனிவா அமர்வுகளில் புகுந்து டொலர்களை காவிக்கொண்டு வந்தவர்கள் நீங்கள், நாம் அவ்வாறு கீழ்த்தரமான வேலையை ஒருபோதும் செய்யவில்லை என்றார்.

மீண்டும் கருத்து தெரிவித்த அமைச்சர் வீரசேகர, யுத்தத்தை வெற்றி கொண்ட வீரர்களில் முதல் ஐவரில் நீங்கள் மட்டுமல்ல நானும் உள்ளேன். ஆனால் நீங்கள் யுத்தத்தை காட்டிக்கொடுத்த நபர், யுத்தத்தை காட்டிக்கொடுத்த விடயங்களில் வெள்ளைக்கொடி விவகாரம் முக்கியமானதாகும். அமெரிக்காவில் இதனை கூறினீர்கள், இங்குள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கும் நீங்கள் கூறினீர்கள்.

இதனால் உங்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ள வேண்டாம். மகேஸ்வரன் என்ற புலி பயங்கரவாதி கூறிய விடயங்களை வைத்துக்கொண்டு ஒரு இராணுவ வீரனை தண்டித்த நபர் நீங்கள். நீங்கள் கண்ணால் நேரில் பார்த்ததை போலவே கூறுகின்றீர்கள்.

தமிழ் அமைப்புகளிடம் பணத்தை பெற்றுக் கொள்ள நீங்கள் இவ்வாறான பொய்களை கூறுகின்றீர்கள். சுனில் ரத்நாயக என்பவர் யுத்தத்தில் முன்னணியில் இருந்த நபர். மகாசோன் பிரிவில் இருந்த முக்கியமான நபர். புலிகள் அஞ்சிய ஒரேயொரு அமைப்பும் மகாசோன் என்பதை மறந்துவிட வேண்டாம். விடுதலைப் புலிகளை நாம் விடுதலை செய்தபோது எதிர்க்காத பொன்சேகா இப்போது இராணுவ வீரர் ஒருவருக்கு விடுதலை கொடுத்தவுடன் கொதித்தெளுகின்றார்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, நீங்கள் கூறுவதை பார்த்தல், விடுதலை செய்யப்பட்ட 12 ஆயிரம் புலிகளையும் கொலை செய்ய வேண்டும் என்பதா? முட்டாள் தனமான கருத்துக்களை கூற வேண்டாம். இவ்வாறான கருத்துகளால்தான் சர்வதேசம் எம்மை நிராகரித்து வருகின்றது. பைத்தியக்காரன் போன்று கருத்து தெரிவிக்க வேண்டாம்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, பணத்திற்காக முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் நபரே நீங்கள் என்பது வெளிப்பட்டு விட்டது. தமிழர்கள் கொல்லப்பட்டனர் என தமிழ் அரசியல் தரப்பினர் கூறும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய நீங்கள் எவ்வாறு தமிழர் பகுதிகளில் வெற்றி பெற்றீர்கள். எனவே புலிகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் உங்களுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நிலையியல் கட்டளை 91 ஐ மீறிய விதத்தில் அமைச்சர் உரையாற்றி வருகின்றார். எனவே இந்த கருத்துக்களை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர், ஹன்சாட்டை பார்த்து தான் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதன் பின்னர் மீண்டும் உரையை தொடர்ந்த அமைச்சர் வீரசேகர, சர்வதேச ஊடகங்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக பொய்களை கூறி வருகின்றீர்கள். நீங்கள் ஒரு மனநோயாளி என்றார். 

இதனை அடுத்து அமைச்சருக்கும் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment