இலங்கையில் தற்போது கொவிட் பரவலுடன் பி.1.1.71 உள்ளிட்ட வெவ்வேறு புதிய வகை வைரஸ்கள் - எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

இலங்கையில் தற்போது கொவிட் பரவலுடன் பி.1.1.71 உள்ளிட்ட வெவ்வேறு புதிய வகை வைரஸ்கள் - எச்சரிக்கை மிக்க பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தற்போது கொவிட்-19 வைரஸ் பரவலுடன் பி.1.1.71 உள்ளிட்ட வெவ்வேறு புதிய வகை வைரசுக்களும் இனங்காணப்பட்டுள்ளன. முன்னரைவிட தொற்று மிக வேகமாகப் பரவும் அதேவேளை, பாரதூரமான நோய் அறிகுறிகளும் ஏற்படக்கூடும். எனவே வைரஸ் மிக வேகமாகப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக்கொண்ட இடங்களுக்கு செல்வதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வைரஸ் தொற்று பரவலில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க அம்சம் காலத்துடன் அவை தனது நிலையை மாற்றிக் கொள்வதாகும். 

வைரஸின் ஒரு புரதத்தில் மாற்றம் ஏற்பட்டால்கூட அது குறித்த வைரஸின் செயற்பாட்டில் பெருமளவிலான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான மாற்றத்தின் காரணமாக வைரஸ் பரவும் வேகம் அதிகமாகக் காணப்படும். அதேபோன்று வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்பும் பாரதூரமானதாகக் காணப்படும்.

தற்போது இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலுடன் பி.1.1.71 உள்ளிட்ட வௌ்வேறு புதிய வகை வைரசுக்களும் இனங்காணப்பட்டுள்ளன. முன்னரைவிட தொற்று மிக வேகமாகப் பரவும் அதேவேளை, பாரதூரமான நோய் அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.

உலகலாவிய மட்டத்தில் குறிப்பிட்டவொரு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு அமைய, கொவிட் வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கு ஏதுவான 3 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

புதிய வகை வைரசுக்களுக்கும் இந்த காரணிகள் பொறுந்தும். வைரஸ் எவ்வகையாயினும் மக்கள் அனைவரும் அதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள குறித்த இடங்களை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் ஒரு கொவிட் தொற்றாளர் இருந்தால்கூட, அங்குள்ள ஏனையோருக்கும் இலகுவில் வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. அத்தோடு மக்கள் ஒருவருடன் ஒருவர் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதும் வைரஸ் தொற்றுக்கு ஏதுவாக அமையும். மிகவும் நெருக்கமாக அல்லது காற்றோட்டம் அற்ற இடங்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 

இந்த காரணி குறித்து பெருமளவில் பேசப்படாவிட்டாலும் இவ்வாறான இடங்களும் அபாயம் மிக்கவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே மேற்கூறப்பட்ட இவ்வாறான 3 இடங்களையும் இயன்றவரை புறக்கணிக்க வேண்டும்.

மாறாக இவ்வாறான இடங்களுக்கு ஏதேனுமொரு அத்தியாவசிய தேவைக்காக செல்ல வேண்டியேற்பட்டால், அங்கு செலவிடம் காலத்தை இயன்றவரை குறைத்துக் கொள்வதின் மூலம் அபாயத்திலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போதுள்ள அதி அபாயம் மிக்க நிலையில் முடிந்தவரை மேற்குறிப்பிட்ட 3 இடங்களையும் தவிர்த்துக் கொள்வதே சிறந்தது.

அதேபோன்று எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளல், சரியான முறையில் முகக்கவசம் அணிதல் என்பவற்றின் மூலம் கொவிட் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்த உதவும். 

எனினும் இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுகின்றோம் என்பதற்காக மேற்கூறப்பட்ட இடங்களில் அதிகளவு நேரத்தை செலவிட்டோமெனில் அபாயத்தை தவிர்த்துக் கொள்ள முடியாது.

நாட்டில் வைரஸ் மிக வேகமாக பரவும் இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொருநபர்களும், அவர்களது உறவினர்களும் இயன்றவரை மேற்கூறிய இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment