இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படும் அபாயம் : மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படும் அபாயம் : மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகிறது. அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. எனவே அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.

எனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனினும் ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

எனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும். வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.

தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment