(எம்.எஸ்.எம்.ஸாகிர் & றிஸ்கான் முஹம்மட்)
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தை வைத்து தமிழ் - முஸ்லிம் தொப்புள் கொடி உறவைப் பிரிக்க முயற்சிக்காதீர்கள் என ஜனனம் அறக்கட்டளையின் தேசியத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் சம்பந்தமாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கோண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலக பிரச்சினையானது மிக நீண்ட நாட்களாக உருவெடுத்த ஒரு பிரச்சினையாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது என்பதை நான் ஆரம்பத்தில் களத்தில் நின்று அறிந்திருக்கிறேன்.
இந்த விடயத்தில் சில அரசியல்வாதிகள் இரண்டு பக்கமும் அலசி ஆராய்ந்து முடிவு ஒன்றை பெற்றுத் தருவார்கள் என்று மேல் மட்டங்களில் சிறுபான்மை தலைமைகள் எல்லாம் பேசிக் கொண்டன. ஆனால், எதுவுமே நடக்கவில்லை. இன்றுவரை, சம்பந்தப்பட்ட மக்கள் மட்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
இது இவ்வாறிருக்க இப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான முறையில் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
பிரச்சினைகளை வைத்து உசுப்பேத்தி அரசியல் செய்வதை நாங்கள் கண்கூடாகவே கண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், அமைதி காத்திருக்கின்ற கல்முனை வாழ் தமிழ் பேசும் சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்களை தூண்டிவிட்டு, தமிழ் - முஸ்லிம் தொப்புள் கொடி உறவைப் பிரிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்த விடயத்தை வைத்து இரு தரப்பினரும் அரசியல் காய்களை நகர்த்துகின்றனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இது ஒரு தரப்பினரை சார்ந்த விடயம் அல்ல, மாறாக தமிழ் - முஸ்லிம் எனும் இரு தரப்பினரையும் சார்ந்த விடயமாகும்.
ஆகவே, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் - முஸ்லிம் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து அவர்களினால் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமே இது!
ஆனால், அரசியல்வாதிகள் தங்களுடைய தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக இந்த விடயத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அலைவதை நானும் அரசியலுடன் தொடர்புபட்டவன் என்ற வகையில் பார்த்து வெட்கப்படுகிறேன்.
கல்முனையை பொறுத்தவரை நான் அறிந்த வகையில், மிக நீண்ட காலமாக தமிழ் - முஸ்லிம்களின் உறவு ஒரு நீண்ட தொப்புள் கொடி உறவாகவே இருந்து வருகிறது.
இந்த உறவைப் பிரிப்பதற்கான சில அரசியல்வாதிகளின் சதியாகக்கூட இந்த விவகாரம் இருக்கலாம் என்ற சந்தேகமும் என் மனதில் வலுக்கிறது.
உப பிரதேச செயலக விவகாரமானது ஒரு நிருவாகம் சார்ந்த விவகாரம். ஆகவே, தயவு செய்து இந்த விவகாரத்தை வைத்து உசுப்பேத்தி அரசியல் செய்வதை விட்டுவிட்டு, இருபக்கமும் இருக்கின்ற முக்கியஸ்தர்களை அழைத்து கலந்துரையாடி இதற்கு சுமூகமான தீர்வைக் கொண்டு வாருங்கள் என்பதை மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment