(ஆர்.ராம்)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தினையும் தமிழர்களின் அதிகாரப்பகிர்வு கோரிக்கையையும் ஒப்பீடு செய்ய முடியாது. அதனை அடியொற்றிய தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் தர்க்கமானது பொருத்தமற்றது என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான நீண்ட காலமாக கோரப்பட்டு வரும் அதிகாரப் பகிர்வினைச் செய்வதற்கு தயாரில்லாத அரசாங்கம், தற்போது சீனாவுக்கு விசேட அதிகாரங்களை வழங்கி தனியான நிருவாக அலகினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சன ரீதியாக முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் நீதி அமைச்சர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவானது ஏறக்குறைய இலங்கை முதலீட்டுச் சபையின் பாத்திரத்தினையே கொண்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தினுள் பொருளாதார ரீதியிலான முதலீடுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையே அது மேற்கொள்ளவுள்ளது.
அங்கு விசேட அதிகாரங்கள் எவையும் வழங்கப்படவில்லை. அவ்விதமான கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பானவை. துறைமுக நகரத்தில் விசேட பொலிஸ் அதிகாரங்களோ, காணி அதிகாரங்கோ, நீதித்துறை சார்ந்த அதிகாரங்கோ கிடையாது.
அவ்வாறிருக்கையில், கொழும்பு துறைமுக நகரத்திற்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதும், அதனை அதிகாரப்பகிர்வு விடயத்துடன் தமிழ்ப் பிரதிநிதிகள் ஒப்பிடுவதும் பொருத்தமற்றதாகும்.
கொழும்பு துறைமுக நகரமானது, பொருளாதார முதலீடுகளையே மையப்படுத்தியது. இதில் இன, மத, மொழி வேற்றுமை இல்லை. இங்கு சிறுபான்மை சமூகங்களினைச் சேர்ந்தவர்களும் முதலீடுகளைச் செய்ய முடியும். இது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு என்று எங்கும் வகைப்படுத்தப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகரமானது, பொருளாதார மையம் என்ற வகிபாகத்தினையே எதிர்காலத்தில் வழங்கவுள்ளது. இதனால், நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமைகள் சீராக பேணுவதே இலக்காக உள்ளது.
அவ்வாறிருக்கையில், அரசாங்க எதிர்ப்பு மனோநிலையில் இருந்து கொண்டு அனைத்து விடயங்களையும் பார்ப்பதை முதலில் கைவிட வேண்டும். இலங்கையர்களாக ஒன்நிணைந்து நாட்டை முன்கொண்டு செல்வது தொடர்பிலேயே சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment