மாளிகைக்காடு நிருபர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை கல்முனையில் வழிநடத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், வர்த்தக சங்க முக்கியஸ்தருமான எம்.ஐ.எம்.. அப்துல் மனாப் போன்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கூற்றை பற்றி இதுவரை வாய்திறக்காமல் இருப்பது மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் தெரிவித்தார்.
"கல்முனை அரசியலில் சமகால நிலைகள்" எனும் தொனியில் இன்று (06) ஊடகவியலாளர்களை மருதமுனையில் சந்தித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கல்முனையில் நல்ல குடும்பத்தில் பிறந்த, சிறந்த குண இயல்வுகளை உடைய சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும், கல்முனை மண்ணை பற்றிய பற்றும் பாசமும் கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பிர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் ஆகியோர் கல்முனை அரச காரியாலயங்களை பற்றி சாணக்கியன் எம்.பி அவர்கள் பேசிய பேச்சுக்கு எவ்வித அசைவுகளுமில்லாமல் மௌனமாக இருப்பதன் மூலம் அவரின் கூற்றை ஆதரிக்கிறாரா எனும் சந்தேகம் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை காரியாலயம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது போன்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியாசாலை முஸ்லிம்கள் மட்டும் பாவிக்கும் வைத்தியசாலை போன்றும் பச்சை இனவாதமாக உயரிய பாராளுமன்ற சபையில் தெரிவித்தார் சாணக்கியன் எம்.பி.
வடக்கும் கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபை மலர வேண்டும் என்றார் சாணக்கியன் எம்.பி. மட்டக்களப்பில் கல்வி வலயம் தொடர்பில் இனவாதமாக பேசினார். கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் இல்லாத பொய்களையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்க பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை கல்முனையில் வழிநடத்திய இவர்கள் இது தொடர்பில் மௌனம் காப்பதன் மூலம் அவர்களின் கூற்றை ஆமோதிக்கிறார்களா ? என கேட்க விரும்புகிறேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட அரசின் ஆதரவு தமிழ் எம்.பிக்களும், சகல தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து கிழக்கு முஸ்லிம்களுக்கு அதிலும் குறிப்பாக கல்முனை பிராந்திய முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய அரசின் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் என பலரையும் தொடர்ந்தும் சந்தித்துக் கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சகோதரர் மனாப் போன்றவர்கள் மௌனம் துறந்து தன்னுடைய கல்முனை சார்ந்த நிலைப்பாட்டை உடனடியாக மக்களுக்கும், இனவாதிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment