(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் அதன் தேவைக்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, மூன்று மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்காமல் திட்டமிட்டு அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்க முயற்சிக்கிறது. றிஷாத் பதியூதீனின் பாராளுமன்ற உறுப்புரிமையை கேள்விக்குள்ளாக்கி, அவரின் வரப்பிரசாதங்களை இல்லாமலாக்குவதற்கான உரிமை சபாநாயகருக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியூதினுக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இடமளிக்கக்கூடாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார். இது ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்படும் பாரதூரமாக தாக்குதலாகும்.
பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் சிறிதளவிலாவது அறிந்திருந்தால் சரத் வீரசேகர இது போன்றதொரு கருத்தை தெரிவித்திருக்க மாட்டார்.
தனது தேவைக்கேற்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையிலடைத்து, மூன்று மாதங்கள் அவர்களை பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்து, பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதிலேயே அரசாங்கம் மும்முரமாகவுள்ளது.
இவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்படும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் சரத் வீரசேகர அரசாங்கத்தின் நிலைப்பாட்டையல்லவா தெரிவிக்கின்றார்?
மக்கள் பிரதிநிதியான ரிஷாத் பதியூதீனின் பாராளுமன்ற உறுப்புரிமையை கேள்விக்குள்ளாக்கி, பாராளுமன்றத்தில் அவருக்கு காணப்படும் வரப்பிரசாதங்களை இல்லாமலாக்குவதற்கான வாய்ப்பு சபாநாயகருக்கு கிடையாது. அதற்கான சம்பிரதாய உரிமையும் கிடையாது என்றார்.
No comments:
Post a Comment