காத்தான்குடி மோதலுக்கு பின் தப்பிய ஸஹ்ரானுக்கு இடமளித்ததாக ஒலுவில் நபர் கைது : திருமணப் பதிவாளரான அவர் அடிப்படைவாத கருத்துகளை விதைத்தாகவும் குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

காத்தான்குடி மோதலுக்கு பின் தப்பிய ஸஹ்ரானுக்கு இடமளித்ததாக ஒலுவில் நபர் கைது : திருமணப் பதிவாளரான அவர் அடிப்படைவாத கருத்துகளை விதைத்தாகவும் குற்றச்சாட்டு

ஸஹ்ரான் ஹாஸிமின் கருத்துகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த குழுவினர் மீது, கடந்த 2017 இல் காத்தான்குடி அலியார் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஸஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 5 பேருக்கு அபயமளித்த குற்றச்சாட்டில், 55 வயது நபர் ஒருவரை CID யினர் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் (30) இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பி ஒலுவிலுக்கு வந்துள்ள ஸஹ்ரான் குழுவினருக்கு, குறித்த காலப்பகுதியில் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த, அஹமது லெப்பை சுபைதீன் எனும், குறித்த திருமணப் பதிவாளர், தனது வீட்டில் தங்கியிருக்க இடமளித்தமை தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு தப்பி வந்துள்ளவர்களில் 2 மௌலவிகள் உள்ளடங்குவதாகவும், அவர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் (TID) தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 3 பேர்களும் ஸஹ்ரான், அவரது சகோதாரர் ரிழ்வான் உள்ளிட்ட, உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்தாரிகள் எனவும், அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு முன்னரான அடிப்படைவாத விடயங்கள் தொடர்பில் CID மற்றும் TID யினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர் ஸஹ்ரானின் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பவும் உதவியதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு, தற்போது மட்டக்களப்பு பயங்கரவாத தடுப்பு உப பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபரை, ஆரம்பகட்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேநகபரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad