அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் விக்கிரமசிங்க - News View

Breaking

Post Top Ad

Thursday, May 6, 2021

அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது - ரணில் விக்கிரமசிங்க

(எம்.மனோசித்ரா)

கொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்டபோது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட சிகிச்சைகளுக்கான இயற்கை சுவாசக் கருவிகள், அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை பெற்றுக் கொண்டிருந்தாலும் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில், கொவிட்-19 இரண்டாம் அலை ஏற்பட்டபோது அரசாங்கம் போதியளவு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவில்லை. அனைவரும் தம்மிகவின் பானி மருந்தை நம்பி செயற்பட்டனர்.

கூடியளவு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்திய போதும் அரசாங்கம் கவனத்தில் கொண்டிருக்கவில்லை.

இதனால் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு தடுப்பூசிகளை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்தியாவிலிருந்து அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்த போது அதற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் படுமோசமாக விமர்சித்தது.

ஆனால் இன்று அந்த சேவையில் மக்கள் முழு அளவில் பயன்பெறுகின்றனர். அரசாங்கம் தற்போது மேலும் அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை விட இயற்கை சுவாசக் கருவியே அதிகமாகவுள்ளது. கொவிட் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகள் ஏற்பட்டபோது இயற்கை சுவாசக் கருவிகள், அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் போன்றவற்றை கொள்வனவு செய்யுமாறு கூறியும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வில்லை.

தடுப்பூசி கிடைக்காவிடின் மாற்று சிகிச்சைகளுக்கு இயற்கை சுவாசக் கருவிகள், அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் மற்றும் ஒக்சிஜன் என்பவை மிக முக்கியம் என்பதாலேயே அன்று வலியுறுத்தினேன்.

குறைந்தது ஆயிரம் இயற்கை சுவாசக் கருவிகள் அவசியமாகின்றது. கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானங்களை நாம் முன்வைத்திருந்த நிலையிலும் அரசாங்கம் அதனை கண்டுக்கொள்ளாது இன்று நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.

இங்கிலாந்தில் கொவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கு என தனியாக வைத்தியாலையொன்றே அமைத்துள்ளது. நாம் தற்போதுதான் அதனை சிந்திக்கின்றோம். 

பி.சி.ஆர் பரிசோதனைகளும் பல நெருக்கடியிலேயே உள்ளது. உரிய திட்டத்தை ஆரம்ப கட்டத்தில் வகுக்காமையே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad