அரசாங்கம் தவறைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் - எச்சரித்தார் வஜிர அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 4, 2021

அரசாங்கம் தவறைத் திருத்திக் கொள்ளாவிட்டால் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் - எச்சரித்தார் வஜிர அபேவர்தன

(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமை தற்போது தெளிவாகியுள்ளது. உரிய வேளையில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியதால், ஒட்டு மொத்த நாட்டு மக்களும் மிகுந்த அபாயத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. அரசாங்கம் அதன் தவறைத் திருத்திக் கொள்ளாவிட்டால், எதிர்வரும் காலத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எச்சரித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியிருப்பதாவது, தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஆரம்பமாகியிருக்கிறது. இந்த வைரஸ் பரவல் ஆரம்பமானதிலிருந்தே எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இயலுமானவரையில் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து கூறிவந்தோம். அதுமாத்திரமன்றி அவசியமான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற செயற்திட்டத்தைத் தயாரிக்குமாறும் வலியுறுத்தினோம்.

எனினும் அவையனைத்திற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே முன்னர் அரசாங்கம் கூறி வந்தது. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகின்றது.

தமிழ், சிங்கள புது வருடத்தின் போது உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, வரையறுக்கப்பட்ட விதத்தில் புது வருடத்தைக் கொண்டாட முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆனால் ஏனைய மத ரீதியான உற்சவங்களுக்கோ பண்டிகைகளுக்கோ சர்வதேச நாடுகள் எவற்றிலும் இத்தகைய அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தியா அத்தகைய தவறை இழைத்தது. மத ரீதியான உற்சவமொன்றை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த உற்சவத்தில் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதுடன், அதன் விளைவாக தற்போது இந்தியா பாரிய நெருக்கடிநிலைக்கு முகங்கொடுத்திருக்கிறது.

எமது நாடு தற்போது மோசமான நிலையிலிருக்கிறது. எனது மாவட்டமான காலியில் சுமார் 3500 பேருக்கு அதிகமானோர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். கண்டறியப்படாத தொற்றாளர்கள் பலர் இருக்கின்றார்கள். இவ்வாறு தொற்றுக்குள்ளாவோர் உளவியல் ரீதியில் அச்சமடைவதால், அது மேலும் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

அதேபோன்று இது விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே தனியார் துறையினரின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டிருக்கலாம். வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியைத் தனியார் துறையினருக்கும் வழங்கியிருக்கலாம்.

அரசாங்கம் உரிய வேளையில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்குத் தவறியதால், தற்போது ஒட்டு மொத்த நாட்டு மக்களும் மிகுந்த அபாயத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. அரசாங்கம் அதன் தவறைத் திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் காலத்தில் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும்.

No comments:

Post a Comment