பொலிஸ் நிலையத்திற்குள் பிறந்தநாள் கொண்டாடிய குருநாகல் நகர மேயர் - பொலிஸ் ஊடக பேச்சாளர் என்ன சொல்லுகிறார் ? - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

பொலிஸ் நிலையத்திற்குள் பிறந்தநாள் கொண்டாடிய குருநாகல் நகர மேயர் - பொலிஸ் ஊடக பேச்சாளர் என்ன சொல்லுகிறார் ?

(எம்.எப்.எம்.பஸீர்)

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், குருணாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, குருநாகல் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியமை தொடர்பில் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் இரு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதன்படி, குறித்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்கவை அங்கிருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, குருநாகல் பொலிஸ் நிலையத்தில் நேற்று (30) விஷேட பிரித் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்றினை ஒழிக்க முன்னெடுக்கும் பிரார்த்தனையாக அது அமைந்திருந்தது.

அதற்காக மட்டுமே அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அந்த பிரித் நிகழ்வின் இறுதியேலேயே நகர மேயருக்கு பொலிஸ் நிலையத்துக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில் பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவிடம் வினவிய போது 'இது ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை. பொலிஸ் நிலையத்துக்குள் நடந்திருக்கக் கூடாத ஒரு செயல். உண்மையில் இது தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானது.

அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பொலிசாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அதில் கலந்துகொண்ட பொலிசார் அல்லாத ஏனையோருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்கள் பிரகாரம் நடவடிக்கை நிச்சயம் முன்னெடுக்கப்படும்.' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment