இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் கொழும்பு வடக்கு கடற்பகுதி மற்றும் அதனை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவ மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி கவலைக்குரியதாகும். இம்மக்கள் முகங்கொடுத்த நெருக்கடிக்கு நேரடியாக பொறுப்புகூற வேண்டியவர்கள் மௌனம் காக்கின்றமை அதிருப்தியளிப்பதாக கொழும்பு வடக்கு மறை மாவட்ட அருட்தந்தைகள் 11 பேர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொழும்பு, நீர்கொழும்பு கரையோர வலயத்தின் பிரதான அருட்தந்தை சாகர ஹெட்டியாராச்சி உள்ளிட்ட 11 அருட்தந்தைகளின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் கொழும்பு வடக்கு கடற்பகுதி மற்றும் அதனை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவ மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி கவலைக்குரியதாகும்.
இம்மக்கள் முகங்கொடுத்த நெருக்கடிக்கு நேரடியாக பொறுப்புகூற வேண்டியவர்கள் மௌனம் காக்கின்றமை அதிருப்தியளிக்கிறது. இதற்கு முன்னர் இவ்வாறு விபத்திற்குள்ளான நியூ டயமன் கப்பலால் பல மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்தமையை நாம் மறக்கவில்லை.
ஏற்கனவே ஏற்பட்ட சூழல் மாசடைவிற்கு இது ரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து பிரச்சினைகள் தோற்றம் பெற்றாலும் அவை உடனுக்குடன் மறக்கப்படுகின்றன.
எனவே இந்த பாதிப்பிற்கு முகங்கொடுத்துள்ள மீனவ சமூகத்தினருக்கு குறுகியகால, நீண்டகால நஷ்ட ஈட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எக்ஸ்பிரஸ் பேர்ல்ஸ் நிறுவனம் அல்லது பொறுப்புகூற வேண்டிய நிறுவனங்கள் அல்லது காப்புறுதி நிறுவனங்கள் ஊடாக நாட்டுக்கு கிடைக்கப் பெறும் நஷ்ட ஈட்டுக்கான பயனாளிகளாக மீனவர்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
இதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார நலன் பாதிப்பு தேவையான சகல மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
குறித்த கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சகல காலத்திலும் மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். சமூர்த்தி அல்லது வேறு வழிமுறைகள் ஊடாக தற்போது தொழில் வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு நீண்ட கால திட்டமிடலுடன் சிறந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். மீனவர்கள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட சமூகத்தினர் அல்ல என்றும் , அவர்களும் இந்நாட்டு பிரஜைகளே என்றும் சகலருக்கும் நினைவுபடுத்துகின்றோம்.
No comments:
Post a Comment