அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - எச்சரிக்கை விடுத்தார் எஸ்.பி.திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - எச்சரிக்கை விடுத்தார் எஸ்.பி.திஸாநாயக்க

செ.தேன்மொழி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து செயற்படுவதற்கு ஒரு போதும் தடை விதிக்கப்படமாட்டாது. ஆனால் ஆளும் தரப்பில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் சுதந்திரக் கட்சியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் தேர்தலின் போது தனித்து போட்டியிடுவதாகவும், ஏனைய சிறு கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்கப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்ட பகுதிகளில் அதற்கான இடத்தை வெற்றி கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட மொட்டு சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாகவே வெற்றி பெற்றனர்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தில் மோசடிகளும், ஊழல்களும் அதிகரித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவருக்கு சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கடந்த கால அரசாங்கத்தையும், அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான பாரிய மோசடிகள் தற்போது இடம்பெறவில்லை.

தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பதற்கும் சுதந்திரக் கட்சிக்கு முழு அனுமதியுள்ளது. ஆனால் கடந்த கால தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிந்தித்து பார்க்க வேண்டும். எனினும் எமது சிநேகித கட்சியான சுதந்திரக் கட்சியை எம்முடன் இணைத்து கொண்டு செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம். 

இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் சிறு கட்சிகள் எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, தங்களது கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களை அதிகளவில் தேர்தலில் போட்டியிடச் செய்ய விரும்புவதுடன் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.

இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்துடன் அமைத்துக் கொண்டுள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், அரசாங்கத்தின் கூட்டணியாக செயற்பட்டுக் கொண்டு அந்த அரசாங்கத்திற்கு எதிராகவே விரல் நீட்டி பேசுவது தொடர்பில், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் துறைமுக நகரத்தை அமைத்துக் கொடுத்த சீன நிறுவனத்திற்கு 99 வருடங்கள் குத்தகைக்கே வழங்கப்படவுள்ளது.

அதன் உரிமை இலங்கைக்கே கிடைக்கப் பெறும். அதனால் தற்போது நாடு எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமையை கருத்திக் கொண்டு, இந்த துறைமுக நகர திட்டத்தை செயற்படுத்த இடமளித்தால் பல்வேறு நன்மைகள் நாட்டுக்கு கிடைக்கப் பெறும் என்றார்.

No comments:

Post a Comment