தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவு - இலங்கையின் கொரோனா நிலைவரம் ! - News View

About Us

About Us

Breaking

Friday, May 7, 2021

தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவு - இலங்கையின் கொரோனா நிலைவரம் !

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்து வீடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் வைத்தியசாலைகள், இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் சிகிச்சை படுக்கை பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு, 800 இற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் உள்ளிட்ட சகல கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மேல் மாகாணத்தில் பல பகுதிகள் முடக்கப்பட்டதோடு, வெலிசறை பொருளாதார மத்திய நிலையமும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவு
நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மிக்குமளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் அதே நேரம், அதற்கு சம அளவிலானோர் குணமடைந்து வீடுகளுக்குச் செல்லவில்லை. எனவே வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கிறது. இவ்வாறான நிலைமை தொடரும்பட்சத்தில் சிகிச்சைகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எனவே இடைநிலை பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை 1914 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 121338 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 101763 பேர் குணமடைந்துள்ளதோடு, 18013 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் 745 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 810 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற 74 தனிமைப்படுத்தல் நிலையங்ககளில் 6705 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி
கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு நிமோனியா நிலை உள்ளிட்ட ஏனைய பாதிப்புக்களும் ஏற்படும். இது சிசுவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையில் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்குவது பாதுகாப்பானது என விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றை பகுப்பாய்வு செய்து, தடுப்பூசி வழங்குவது பொறுத்தமானதென இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் மேலும் பல பகுதிகள் முடக்கம்
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6.30 மணி முதல் 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தில் கடவத்த பொலிஸ் பிரிவில் எல்தெனிய கிழக்கு , சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுன மற்றும் மேல் கரகஹமுன ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

கொழும்பு - பிலியந்தலை பொலிஸ் பிரிவில் ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாக்கந்தன மேற்கு, நிவுன்கம மற்றும் பொல்ஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், களுத்துறையில் அகலவத்த பொலிஸ் பிரிவில் பிம்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மத்துகம பொலிஸ் பிரிவில் யட்டியன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
களுத்துறை மாவட்டத்தில் பதுரலிய பொலிஸ் பிரிவில் மொரபிட்டி மற்றும் பொல்லுன கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் கீழ் ஹெசெஸ்ஸ தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு
கடந்த தினங்களில் வெலிசறை பொருளாதார மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொவிட் தொற்றாளர்கள் 28 பேர் இனங்காணப்பட்டனர். எனவே வெலிசறை பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment