ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல் கைதி, சி.ஐ.டி.யில் இருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் - சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல் கைதி, சி.ஐ.டி.யில் இருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் - சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல் கைதி என அவரது சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, அவரது கைது மற்றும் தடுத்து வைப்பை சட்டவிரோதம் என வர்ணித்த அவர், ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல் கைதியாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் அவ்வாறு  தெரிவித்தார்.

'அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்தின் கைது சட்ட விரோதமானது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரு தசாப்தங்களாக மக்கள் பிரதிநிதியாக இருப்பவை இவ்வாறு எந்த காரணங்களும் இன்றி கைது செய்ததை ஏற்க முடியாது.

அவருக்கு எதிராக சாட்சிகள் இருந்தால், அதனை நீதிமன்றில் முன்வைத்து அவரை நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு தடுப்பில் வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவேதான் கைது, தடுப்பு வைப்புக்கு எதிராக நாம் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளோம். அம்மனு எதிர்வரும் 28 ஆம் திகதி அனேகமாக பரிசீலிக்கப்படும். அம்மனுவை அவசர தேவையுடைய மனுவாக கருதி பரிசீலிக்க நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

ரிஷாட் பதியுதீன், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர். அவ்வாறான ஒருவருக்கு சி.ஐ.டி.யில் தடுத்து வைத்து வைத்தியம் பார்க்க முடியாது. 

சி.ஐ.டி.யிலேயே பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவ்வாறான நிலையில் ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி.யில் இருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad