குறுகிய கால முடக்க நிலையானது தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமே தவிர நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வித அனுகூலங்களையும் தரப்போவதில்லை : கூட்டாக எச்சரித்துள்ள 4 பிரதான மருத்துவ சங்கங்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

குறுகிய கால முடக்க நிலையானது தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமே தவிர நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வித அனுகூலங்களையும் தரப்போவதில்லை : கூட்டாக எச்சரித்துள்ள 4 பிரதான மருத்துவ சங்கங்கள்

(எம்.மனோசித்ரா)

கொவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளமையின் காரணமாக வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பி வலிந்து மருத்துவ ஊழியர்கள் தமது ஆற்றலுக்கு அப்பால் வேலை செய்துள்ளனர். இதன் விளைவாக நாடு முழுவதும் சுகாதாரத்துறை முற்றாக பாரதூரமான வகையில் முடங்கக்கூடிய நிலை ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாட்டின் இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியன கூட்டாக எச்சரித்துள்ளன.

அடுத்தடுத்தும், இடைக்கிடையும், குறுகியகால அடிப்படையிலும் மேற்கொள்ளும் முடக்க நிலை மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் வேலை செய்யும் இடங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர இவை நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வித அனுகூலங்களையும் தரப்போவதில்லை என்றும் அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பில் மேற்குறிப்பிட்ட சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மருத்துவ தொழிற்துறை சார்ந்தவர்களது சகல ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ விசேட நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இலங்கை மருத்துவ சங்கத்தின் இடைக் கல்லூரி குழுவும் சேர்ந்து முடக்கநிலை அல்லது ஊரடங்கு சட்டம் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கைக்கான காரணங்களை விளக்கும் வகையில் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நாம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கையை செவிமடுத்து, நாம் கூறிய யோசனைகளுக்கு இடமளிக்கும் வகையில் சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றோம்.

குறித்தவொரு சமூகத்தில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஐ தாண்டுமாயின் அந்த சமூகத்தில் உண்மையான எண்ணிக்கை மும்மடங்கு அதிகமாகவே காணப்படும். நோய் தொற்று தீவிரமாகப் பரவும் போது எந்தவொரு நாடும் கடுமையான முடக்க நிலையை அல்லது ஊரடங்கை பிரகடனப்படுத்தாமல் தொற்றை கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே சாதாரண குடிமகன் குறுகிய கால சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற விடயத்தை ஏற்றுக் கொண்டு பெருந்தொற்றை கட்டுப்படுத்த கடுமையான முறையில் நடமாட்ட கட்டுப்பாடு விதிப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை.

எனவே மேற்கூறிய மருத்துவ சங்கங்கள் இணைந்து ஏகமனதாக 7 விஞ்ஞான ரீதியான விடயங்களை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் அமுலாகும் வகையில் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முடக்க நிலையை அல்லது ஊரடங்கு உத்தரவையேனும் பிறப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

இந்த 14 நாட்களும் பெருந்தொற்று கட்டுப்பாடின்றி பரவக்கூடிய சங்கிலியை உடைப்பதற்காக இரு கால சக்கரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சகல மாகாணங்களிலும் தொற்று பரவியிருப்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மாத்திரம் தற்போதைய சூழலில் பயன்மிக்கதாக இருக்கப் போவதில்லை.

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு 5 - 7 நாட்களுக்குப் பின்னர் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்படுவதால் அவற்றை தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தல் என்ற நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. எந்த சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றனவோ அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக பரவும் நோய் தொற்று எல்லைகளைத் தாண்டி பரவியிருக்கலாம்.

ஒரு சில நாட்களுக்கு மாத்திரம் நாடு தழுவிய ரீதியிலான முடக்க நிலையை அமுலாக்குவதன் மூலம் மாத்திரம் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இத்தகைய சில நாட்கள் பெருந்தொற்றின் பரவலை அல்லது அதன் வீரியத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு கால சக்கரத்தையேனும் உள்ளடக்க மாட்டாது.

அடுத்தடுத்தும், இடைக்கிடையும், குறுகியகால அடிப்படையிலும் மேற்கொள்ளும் முடக்க நிலையின் போது மக்கள் ஒன்றாக வேலைக்கு வரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் வேலை செய்யும் இடங்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர இவை நாட்டின் பொருளாதாரத்திற்கு அனுகூலங்களைத் தரப்பவதில்லை.

தற்போதைய தொற்று நிலை வீரியமாக பரவுவதாக இருப்பதால் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் மக்களை வெளியே செல்ல அனுமதிப்பதிலும் பயனில்லை. ஆசன எண்ணிக்கைக்கு சமமான பயணிகளுடன் பொது போக்குவரத்து வாடிக்கையாளர் எண்ணிக்கையில் 25 வீதத்துடன் இயங்கும் பல்பொருள் அங்காடிகள் , உணவகங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவை சமுதாயத்தில் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே தற்போதைய தீர்க்கமான தருணத்தில் நாட்டின் சில பிரிவுகளை தனிமைப்படுத்துவதையோ, மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகளை அமுலாக்குவதையோ விடுத்து , 14 நாட்கள் நீடிக்கும் முழுமையான முடக்க நிலை அல்லது ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பது அவசியம். இதன் மூலம் மக்கள் தமக்கு தேவையான விடயங்களை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி வைத்தியசாலைகள், விசேட பராமறிப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு சேவைகள் அடங்கலாக நோயாளிகளுக்கான சேவைகளை சீர் செய்து மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இரு வாரங்கள் பூர்த்தியானதும் மக்கள் தொடர்ந்தும் முகக் கவசம் அணிந்து ஆள் இடைவெளியைப் பேணுதல் முதலான பொது சுகாதார நடைமுறைகளை அனுசரித்து வரும் சூழ்நிலையில் அரசாங்கம் தற்போதைய கட்டுப்பாடுகளை சில மாதங்கள் தொடர்ந்தும் அமுலாக்குவது அவசியம்.

சுகாதார பராமறிப்பு துறையில் நிபுணர்களாக நாம் கூறும் யோசனைகளை அரசாங்கமும் பொது மக்களும் , ஆக்க பூர்வமாகக் கருதக் கூடும் என நம்புகின்றோம். ஏனெனில் துறைசார் விற்பன்னர்களாக தற்போதைய தீர்க்கமான தருணத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள எமது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கருதுகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad