கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாரியளவில் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள இந்திய மக்களுக்காக இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சர்வமத வழிபாடுகள், இலங்கை - இந்தியாவுக்கிடையிலான பல்லாண்டு கால பிணைப்பினை பிரதிபலிப்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
முன்னொருபோதும் எதிர்கொண்டிராத கொவிட் நோய்க்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இந்தியர்களின் நலனுக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தொடர்ந்து பிரார்த்தனைகளையும் முன்னெடுத்து வரும் இலங்கை மக்கள் மற்றும் மத குருமார்கள் உள்ளிட்டோருக்கு இந்திய மக்கள் சார்பாகவும் அரசாங்கம் சார்பாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிடைக்கப் பெறும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள், செய்திகள் தொடர்பாகவும் அதேநேரம் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்வுகள் குறித்தும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் உயர் ஸ்தானிகரும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இந்திய மக்களுக்காக பிரார்த்தனைகளும் பல்வேறு விசேட நிகழ்வுகளும் இலங்கையில் பல பிரதேசங்களிலும் நடத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கடிதம் மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தமது கவலையை தெரிவித்திருந்தனர்.
இரு நாட்டு மக்கள் மத்தியிலும் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கும் உறவுகள் அத்துடன் இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பல்லாயிரம் ஆண்டு கால பிணைப்பு ஆகியவற்றின் உண்மையான பிரதிபலிப்பாக இடம்பெற்ற இந்த பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் போன்றவற்றால் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மகிழ்வடைகிறது.
No comments:
Post a Comment