கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று மக்கள் அஞ்சுகின்றார்கள். அவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இருவருட காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், வீடுகளுக்கே கொண்டுசென்று அவசியமான மருந்துப் பொருட்களை விநியோகிக்கின்ற செயற்திட்டத்தை மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் அறிமுகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், நீங்கள் வீடுகளில் இருக்கலாம். பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் முடிவு அறிக்கைக்காக நீங்கள் வீட்டில் காத்திருக்கலாம். இல்லாவிட்டால், பி.சி.ஆர் பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு காத்திருப்பவராகவும் இருக்கலாம். தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவராகவும் இருக்கலாம்.
யாராக இருந்தாலும் இந்த நோய் தொடர்பிலோ அல்லது தொற்று ஏற்பட்டதன் பின்னர் நீங்கள் செல்ல வேண்டிய இடம் தொடர்பிலோ அல்லது இது குறித்த ஏனைய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவோ சுகாதார அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 011-7966366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும். 24 மணி நேரமும் சேவையிலுள்ள இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு கொவிட்-19 தொடர்பான எந்தவொரு சந்தேகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதனூடாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவோ அல்லது வீடுகளிலேயே இருப்பதனாலோ உள ரீதியான பிரச்சினைகள் மற்றும் சோர்விற்கு முகங்கொடுத்திருப்பவர்கள் அதிலிருந்து மீளவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் முடியும்.
அதேவேளை, தைரொயிட் நோய்க்கான மருந்திற்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சில தரப்பினரால் கூறப்பட்டு வருகின்றது. எனினும் இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. சில தினங்களுக்கு முன்னர் 50 மில்லியன் தைரொயிட் மருந்துகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டன. அதுமாத்திரமன்றி தேசிய மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் இந்த மருந்துகள் உள்ளன.
அவை தவிர மிகவும் அத்தியாவசியமான மருந்துப் பொருட்களில் 6 மாத காலத்திற்கு அவசியமான மருந்துகள் சிலவும் இரு வருட காலத்திற்கு அவசியமான மருந்துகள் சிலவும் போதியளவிற்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அநாவசியமான அச்சமடைந்து, மருந்துப் பொருட்களை அவசரமாகக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
அதுமாத்திரமன்றி தற்போது நாடளாவிய ரீதியில் பகுதியளவிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் தமக்கு வேண்டிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் சிரமங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடம் உள்ளது. எனினும் ஒவ்வொருவருக்கும் தேவையான மருந்துப் பொருட்களை அவர்களது வீடுகளிலிருந்தே பெற்றுக் கொள்ளக் கூடியவாறான செயற்திட்டம் தற்போது இலங்கை மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு பிரதேசங்களிலும் வசிப்பவர்கள் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கீழ்வரும் வட்ஸ்அப் இலக்கங்களுக்கு தமக்கு அவசியமான மருந்துப் பொருட்களின் பெயர்களை அனுப்பி வைக்க முடியும்.
கண்டி - 070-1902737
பேராதனிய - 070-1902739
குருணாகலை-070-1718318
கொழும்பு 01 - 070-1902740
கொழும்பு 04 - 070-1902741
கொழும்பு 07 - 070-1902742
கம்பஹா - 070-1902773
ஆகியவையே மேற்கூறப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்களாகும். அதனூடாக குறித்த மருந்துப் பொருட்கள் உரியவர்களது வீடுகளுக்கே கொண்டுவந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment