தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமிட வேண்டும் : இருமல், சளி, தலைவலி நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் - மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமிட வேண்டும் : இருமல், சளி, தலைவலி நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் - மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நோக்குகையில், நாம் மோசமான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெளிவாகின்றது. இந்தியாவின் நிலை எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்வதுடன் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமிட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை காணொளியொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நோக்குகையில், நாம் மோசமான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெளிவாகின்றது. இந்த மோசமான பாதையென்பது உண்மையில் அச்சத்திற்குரியதொன்றாகும். 

எனினும் அச்சமடைவதன் ஊடாக மாத்திரம் இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண முடியாத சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது. எனவே தொற்றின் பாரதூரத்தன்மையை மதிப்பீடு செய்தல், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமிடல் ஆகியவை மிகவும் அவசியமாகும்.

மருத்துவ ஆய்வுகூட சேவையை எடுத்துக் கொண்டால் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அவசியமான உபகரணங்கள் இருந்தாலும்கூட, அவை தேவையான கேள்வியைப் பூர்த்தி செய்யக் கூடியவையாக இல்லை. அதேபோன்று பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவருவதில் நிலவும் தாமதம் மற்றும் பரிசோதனை முடிவுகளில் ஏற்படும் பிழைகள் தொடர்பில் தற்போது பிரச்சினைகள் காணப்படுகின்றன. பல்வேறு இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்டில் பரவிவரும் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனை உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடர்பிலும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்கூட்டிய எதிர்வுகூறல்களை மேற்கொள்ளாவிட்டால் என்ன நேரும் என்பதற்கு எமக்கு மிகவும் அருகாமையில் உள்ள இந்தியா மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. இந்தியாவின் நிலை எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது குறித்தே தற்போது நாம் சிந்திக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனை வசதிகள், அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில்கள், ஓட்சிசன், பி.சி.ஆர் பரிசோதனை உபகரணங்கள் ஆகியவை போதியளவில் இருப்பதாக யாரேனும் கூறுவார்களேயானால், இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்பதுடன், அதன் தீவிரத்தன்மையை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதே அதன் கருத்தாகும். 

இப்போது இருமல், சளி, தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கட்டாயமாகப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். ஏனென்றால் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் மிகவும் உயர்வாகும். 

பரிசோதனை எனும்போது பி.சி.ஆர் பரிசோதனை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக ஆய்வுகூடப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கூறுகின்றோம். எனவே இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுப்பதை நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் கொண்டுசெல்லுமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

ஆகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார சேவைகளை விரிவாக்குவது அவசியமாகும். இந்நெருக்கடிக்கு திறம்பட முகங்கொடுத்த நாடுகள் அவ்வழிமுறையையே கையாண்டன. குறிப்பாக அனைத்து ஆதார வைத்தியசாலைகளுக்கும் பி.சி.ஆர் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துப் பரிசோதனைகளையும் முன்னெடுக்கக்கூடிய வசதிகள் வழங்கப்பட வேண்டும். 

இப்போது கந்தக்காட்டில் இனங்காணப்பட்ட நோயாளியை தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இனங்காணப்பட்ட நோயாளியை காலிக்கும் கொண்டு செல்வதில் பயனில்லை. நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. மாறாக ஒவ்வொரு பகுதிகளிலும் அடையாளங்காணப்படும் நோயாளர்களுக்கு தேவையான வசதிகள் அண்மைய பகுதிகளிலேயே செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment