உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் அதிகாரத்தை வழங்க அனைவரும் கைகோருங்கள் : கடன் பெறுவதும், நாணயத்தாள்கள் அச்சிடுவதுமே அரசாங்கம் பிரதான செயற்திட்டமாக கொண்டுள்ளது - அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, May 2, 2021

உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் அதிகாரத்தை வழங்க அனைவரும் கைகோருங்கள் : கடன் பெறுவதும், நாணயத்தாள்கள் அச்சிடுவதுமே அரசாங்கம் பிரதான செயற்திட்டமாக கொண்டுள்ளது - அநுரகுமார திஸாநாயக்க

எம்.மனோசித்ரா

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள துறை பொருளாதாரமாகும். வீழ்ச்சியடைந்துள்ள இந்த பொருளாதாரத்தினால் மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரசாங்கத்தின் பொருளாதார சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவே முதலாளித்துவ வர்க்கத்தினரிடமிருந்து உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் அதிகாரத்தை வழங்குவதற்காக அனைவரையும் மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் 'முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவோம், சோஷலிசத்திற்கான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் மே தினக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றின் காரணமாக முகங்கொடுத்த பாரிய நெருக்கடி பொருளாதார நெருக்கடியாகும். இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 1919 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்கப்படும் அதேவேளை, வட்டியுடன் 2017 பில்லியன் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. கடன்களை மீள செலுத்துவதற்கு வருமானம் போதாமலுள்ளது. எனவே அரசாங்கம் மேலும் மேலும் கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை கொண்டு செல்வதற்காக கடன் மேல் கடன் பெறுவதையும், நாணயத்தாள்களை மேலதிகமாக அச்சிடுவதையுமே அரசாங்கம் பிரதான செயற்திட்டமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதத்தில் மாத்திரம் 40000 கோடி ரூபா கடனை சீனாவிடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு கடன்களைப் பெற்றுக் கொள்வதற்காக மிகப் பாரதூரமான நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டியேற்பட்டுள்ளது. 

அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புதுறைமுக மேற்கு முனையம், கொழும்ப துறைமுக நகரம் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தாரை வார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. எனினும் இதன் பின்விளைவுகளின் சுமை நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்வளைவுகளால் இன்று தேவையானளவு பி.சி.ஆர். பரிசோதனைகளைக்கூட முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்கள் மட்டக்களப்பிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

இது மாத்திரமின்றி இன்னொரு புறம் காட்டு யானைகளின் தாக்குதல்களால் மக்கள் உயிரிழக்கின்றனர். வீடுகளை இழக்கின்றனர். இதற்கான தீர்வை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினால் மக்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளாகும். இது மாத்திரமின்றி புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

இதே நிலைமையில் நாடு தொடர்ந்தும் பயணிக்க வேண்டுமா என்று மக்களிடம் கேட்கின்றோம். நாட்டில் பல சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றங்களுக்காக எம்முடன் கைகோர்க்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். முதலாளித்துவ வர்க்கத்தினரிடமிருந்து உழைக்கும் வர்க்கத்தினரின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதற்காக நாமனைவரும் ஒன்றிணைவோம் என்றார்.

No comments:

Post a Comment