கண்டி மாவட்டத்துக்கான தடுப்பூசி நிபந்தனை தொடர்பில் வேலுகுமார் எம்.பி ஆவேசம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

கண்டி மாவட்டத்துக்கான தடுப்பூசி நிபந்தனை தொடர்பில் வேலுகுமார் எம்.பி ஆவேசம்

ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன் என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டிருக்கின்றது? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பினார்.

கண்டி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ரஷ்ய நாட்டினது தயாரிப்பான ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் இங்கு வழங்கப்படுகின்றன. முதல் கட்டத்தில் 50000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

எனினும் ஒரு தடுப்பூசி மட்டுமே என்றாலும் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன் என கையொப்பம் இடுபவர்களுக்கே கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. எந்த அடிப்படையில், யாரால் இந்த நிபந்தனை கொண்டுவரப்பட்டிருக்கின்றது?

ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஸ்புட்னிக் வீ தயாரிப்புகள் இரண்டு வழங்கப்பட வேண்டும் என்பது மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மருத்துவதுறை சார்ந்த நிபுணர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

முதலாவது தடுப்பூசி வழங்கி 21 நாட்கள் ஆகின்ற போது இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். எனினும் அதனை இரண்டு மூன்று வாரங்களுக்கு பிற்போடலாம் எனவும் தடுப்பூசி நிறுவனம் கூறுகின்றது. ஆனால் எங்கேயும் ஒரு தடுப்பூசி போதுமானதென கூறப்படவில்லை. 

இவ்வாறான சூழலில் ஒரு தடுப்பூசியாக இருந்தாலும் அதனை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன் என மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி கையொப்பம் பெறுவது எந்த வகையில் நியாயம்? இறுதியில் மக்கள் ஒப்புக் கொண்டதால்தான் ஒன்றை வழங்கினோம், இரண்டாவதை வழங்க எங்களால் முடியவில்லை என கூறுவதற்கு முன்கூட்டியே செய்கின்ற திட்டமாகவே இது இருக்கின்றது. தங்களது இயலாமையை மக்கள் மீதான தவறாக சுமத்தப்பார்க்கும் அரசாங்கமாக இது மாறியிருக்கின்றது.

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியாக இருப்பினும், இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் மட்டுமே அது பிரயோசனமானதாக அமையும். அவ்வாறு இல்லாத போது அதில் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை. பெயரளவில் அரசாங்கம் தடுப்பூசி வழங்கிவிட்டோம் என கூறும் முயற்சியாக மட்டுமே இருக்கும். 

எனவே தடுப்பூசி ஒன்று பெற்றிருந்தாலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படப்போவதில்லை. அத்தோடு வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகின்ற போது இதனை ஏற்றுக் கொள்ளப்போவதும் இல்லை. மக்களை இரண்டும் கெட்ட நிலைக்கு தள்ளுகின்ற வேலையை செய்யப்பார்க்காதீர்கள். 

ஏனைய பிரதேசங்களை போலவே கண்டி மாவட்டத்திலும் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியாக இருக்கலாம், அல்லது சினோபர்ம் தடுப்பூசியாக இருக்கலாம், முறையாக இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உரிய வகையிலே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து உயிராபத்து எதிர்நோக்கியிருக்கும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, நிபந்தனையிட்டு, கையொப்பம் வாங்கி மக்கள் மீதே பழியை சுமத்த பார்க்காதீர்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad