வியாபாரிகளின் பிரச்சினைகளை அரசு இனங்கண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

வியாபாரிகளின் பிரச்சினைகளை அரசு இனங்கண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்

ஓட்டமாவடி அ.ச.முகம்மது சதீக்

இன்று நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை கொரோனவிலிருந்து பாதுகாப்பதே அரசின் நோக்கமாகவுள்ளது.

இதன் காரணத்தினால் நாட்டில் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டுள்ளதனால் வியாபாரிகள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், கடன்களைச் செலுத்த முடியாமலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

உற்பத்தியாளரிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அல்லது சேவைகளை நுகர்வோருக்கு பரிமாற்றம் செய்யும் பணியில் இடம்பெறும் நடவடிக்கைகள் அனைத்தும் வியாபாரம் அல்லது வணிகம் என்ற சொல்லலாம்.

பொருட்களின் உடமையும் உரிமையும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைச் சென்றடைவதனால் தான் நுகர்வோர் பொருட்களை நுகர முடியும்.

எமது நாட்டைப் பொறுத்தவரை மொத்த வியாபாரிகள் என்றும் சில்லறை வியாபாரிகள் என்று உற்று நோக்கினாலும், தற்போதைய எமது பிரதேச நடைமுறையின்படி சிலர் மொத்த வியாபாரியாகவும் சில்லறை வியாபாரியாகவும் ஒரே நேரத்தில் செயற்படுகின்றனர்.

அத்தகு வியாபாரிகள் சில பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மொத்தமாக வியாபாரம் செய்வதனையும் சில பொருட்களை சில்லறையில் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதனையும் காணலாம்.

இதற்கு தற்போது பிரதேசம் தோறும் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து வருகை தரும் முகவர்கள் கிராமங்களின் உள் வீதிகளுக்குள் சென்று தமது உற்பத்தி நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் குறைந்த விலையில் அப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் தேவையான விலைக்கழிவுகளைக் கொடுத்து பொருட்களை விற்பனை செய்ய உதவுகின்றனர்.

வணிக முகவர்களினால் கொடுக்கப்படும் பொருட்களை தமது கடைகளுக்குள் இறக்கி அவ்வணிக முகவரினால் கோரப்படும் தொகையில் ஒரு பகுதியினை காசாகவும் மீதித்தொகையினை பிற்திகதியிடப்பட்ட காசோலையாகவும் வழங்கி வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை விற்கும் போது வருகின்ற பணத்திலிருந்து காசோலைக்குரிய பணத்தினை உரிய வங்கியில் குறிப்பிட்ட திகதியில் வைப்பிலிடுவார்கள்.

இது வழமையான நடைமுறையாக வியாபாரிகளாலும் வணிக முகவர்களினாலும் பின்பற்றப்படுகின்றது.

தற்போது கொரானவின் அச்சம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வணிக முகவர்களினால் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

வணிக முகவர்களிடமிருந்து பொருட்களை வியாபாரிகள் பெற வேண்டுமாக இருந்தால், வியாபாரிகள் உடனடியாக காசு பரிமாற்றல் மூலமாகத்தான் செய்ய வேண்டியுள்ளது.

வணிக முகவர்கள் வியாபாரிகளிடம் தமது பொருட்களுக்குமான முழுத்தொகையினை உடனடியாக வழங்கினால் தான் பொருட்களை வாகனத்தை விட்டு இறக்க முடியும் என்ற அடிப்படையில் வணிக முகவர்கள் செயற்படுவதனால் வியாபாரிகள் பலர் பொருளாதாரத்தில் பலத்த சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வியாபாரிகள் கொரோனா நோய் அச்சத்திற்கு முன்னர் பல உற்பத்தி முகவர்களுக்கு பிற்திகதியிடப்பட்ட காசோலையையும் வழங்கியுள்ளனர். அதனால் அக்காசோலைகளுக்கு உரிய திகதியில் காசு வங்கியில் வைப்பிலிட வேண்டும் மற்றும் பயணத்தடை காரணமாக வியாபாரிகளின் வியாபாரத்தளங்கள் மூடப்பட்டு வியாபாரமின்மையால் பொருளாதார சிக்கல்களிலுள்ள நிலைமைகளில் இவ்வாறு வணிக நிறுவனங்களும் வணிக முகவர்களின் செயற்பாட்டால் பல வியாபாரிகள் நஸ்டத்தை எவ்வாறு எதிர்காலத்தில் ஈடுசெய்வோம் என்ற மன உளைச்சலில் உள்ளனர்.

மற்றும் வியாபாரிகள் குக்கிராமங்களுக்குள் இருக்கும் சிறு சிறு கடைகளுக்கு பொருட்களை கடனுக்கும் வழங்கியுள்ளனர். அக்குக்கிராம சில்லறைக்கடைகளின் உரிமையாளர்களும் கொரோன அச்சம் மற்றும் பயணத்தடை காரணமாக கடைகளை மூடியுள்ளதனால் பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதனால் அச்சில்லறை வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் கடன் தொகையினை அறவிட முடியாமலும் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆக்குக்கிராம சில்லறைக்கடை உரிமைகள்கள் கூட நுகர்வோருக்கு பொருட்களை கடனுக்கும் வழங்கியுள்ளதாகவும் அவற்றை நுகர்வோரிடமிருந்து அறவிட முடியாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

நுகர்வோர்களில் தமது அன்றாட வேலைகளைச் செய்து வருமானத்தைப் பெற்றால்தான் கடன்களை அறவிட முடியுமென்று அச்சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மற்றும் வங்கியில் உரிய திகதிக்குள் காசோலைக்கான பணத்தினை வைப்பிலிடமால் தாமதமாகினால் வியாபாரிகளின் காசோலை பணமின்றி திருப்பப்பட்டு அவர்களின் வங்கியிலுள்ள நடைமுறைக்கணக்கும் மூடப்படலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

வங்கிகள் மேலதிகப்பற்று காசை வழங்கினாலும் அவற்றைக் கொண்டு ஈடு செய்ய முடியாமல் உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மற்றும் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளம், மின்சார கட்டணம் போன்றவற்றின் மூலம் ஏற்படும் செலவுகள் இம்மொத்த வியாபாரிகளின் மேலும் இத்தருணத்தல் சுமையாகயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இவ்வியாபாரிகளின் பிரச்சினைகளை அரசு இனங்கண்டு பொருத்தமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு விழப்போகும் வியாபாரிகளை தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment