முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Sunday, May 30, 2021

முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை நாளை (31) முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

´சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத் தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளை முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவதுஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறித்த தினத்தில் தடுப்பூசியினை பெறத்தவறின் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களினை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும்´ என்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad