விருந்துபசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 7 பேர் இராஜகிரியவில் கைது - விடுதியை வழங்கிய முகாமையாளரும் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

விருந்துபசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 7 பேர் இராஜகிரியவில் கைது - விடுதியை வழங்கிய முகாமையாளரும் கைது

இரராஜகிரிய பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மதுபானம் மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்தி விருந்துபசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 11.00 மணியளவில், வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிரிய பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேல் மாகாண தெற்கு விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு (15) முதல் இன்று முற்பகல் வரை, 2 பெண்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் இவ்வாறு விருந்துபசார (Party) நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அது தவிர குறித்த நடவடிக்கைக்காக, இடத்தை வழங்கிய தங்குமிட விடுதியின் முகாமையாளரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப் பொருள் காணப்பட்டதாகவும், கிரிவத்துடுவவைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர், இரண்டு பிடியாணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த வருடம் ஒக்டோபர் 15 இல் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் கடந்த மே 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கைக்கு அமைய, இவ்வாறான விருந்துபசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

குறித்த 7 சந்தேகநபர்களையும் இன்று (16) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment