கொவிட் தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள் : நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது - வஜிர அபேவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

கொவிட் தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள் : நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது - வஜிர அபேவர்தன

(நா.தனுஜா)

சுகாதார சேவை மற்றும் கொவிட்-19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் (நேற்று நண்பகலில் இருந்து) அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறிகையில், நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நம்மை நாமே சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய அவசியமேற்பட்டுள்ளது. கொவிட்-19 பரவல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது இதனை எம்மால் வெகுவாக உணர்ந்துகொள்ள முடிந்தது. 

ஏனெனில் இவ்விடயத்தில் விவாதிப்பதனால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாகப் பிரிந்துநின்று தத்தமது கருத்துக்களை முன்வைக்கின்றனவே தவிர, ஒன்றிணைந்து இதற்குரிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்குப் பதிலாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையுடன் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்து, ஒருமித்து கலந்துரையாடி தீர்வொன்றை அடைந்துகொள்வதே உண்மையில் சிறந்ததாகும். நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சிக்கு, தம்மைத்தாமே சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் தன்மையுள்ளது.

தற்போதைய கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் அதேவேளை, இனிவரும் காலங்களில் மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத்தாரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான வருமானத்தை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் விரிவாக விவாதித்து, அதற்கேற்றவாறான செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

எது எவ்வாறெனினும், நாம் இந்த வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்த மீள வேண்டும். நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் மருத்துவ சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் பற்றாக்குறை என்பன தற்போது நாடு முகங்கொடுத்துள்ள மிகமுக்கிய நெருக்கடிகளாகும்.

அதேவேளை செயற்கை சுவாசக்கருவிகள் மற்றும் ஒட்சிசனை வழங்கும் உபகரணங்களை மேலும் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றுக்கான பற்றாக்குறை ஏற்படாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 

இலங்கையில் ஒட்சிசனை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் காணப்பட்டாலும்கூட, அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது. நாம் பாரியதொரு தேசிய ரீதியான அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருக்கிறோம். மேலும் தனியார் துறையினரிடமிருந்து கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொறுத்தவரையில், தாதியர்கள் பலர் பணியிலிருந்து விலகுவதாக அறிய முடிகின்றது.

தாதியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டிய அவசியம் தனியார் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் சுகாதார சேவை மற்றும் கொவிட்-19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment