அபிவிருத்திகளை நிறுத்தி தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள், தற்போதைய நிலைமையில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதே முக்கியம் - சரத் பொன்சேக்கா - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

அபிவிருத்திகளை நிறுத்தி தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள், தற்போதைய நிலைமையில் மக்களின் உயிரைப் பாதுகாப்பதே முக்கியம் - சரத் பொன்சேக்கா

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். எனவே அபிவிருத்தி பணிகளை நிறுத்தியேனும், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தடுப்பூசி கொள்வனவிற்கு உபயோகிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பமானபோதே அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது முகங்கொடுத்துள்ள அச்சுறுத்தலுக்கும் இதுவே பிரதான காரணியாகும்.

தற்போது நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் நூற்றுக்கு 7 சதவீதமானோருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்படுகிறது. அத்தோடு ஆயிரத்தில் ஒருவர் உயிரிழக்கின்றனர். எனவே இந்த நிலைமை மேலும் தீவிரமடையாமல் தவிர்ப்பதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

அபிவிருத்தி பணிகளை சற்று நிறுத்தி, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்த வேண்டும். தற்போது அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதைவிட மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதே அத்தியாவசியமானதாகும்.

இவ்வருடத்தில் மாத்திரமின்றி அடுத்த வருடமும் கொவிட் கட்டுப்பாட்டுக்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும். கடந்த வருடத்தை விட இவ்வருடம் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன.

கடந்த கொத்தணியில் கடற்படையினர் பெருமளவானோருக்கு தொற்று ஏற்பட்டது. ஆனால் இப்போது பொலிஸார் வைத்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். 

எனவே சிறிது சிறிதாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதை விட ஒட்டு மொத்தமாக கொள்வனவு செய்வதே பொறுத்தமானது. அது மாத்திரமின்றி இவ்வருடத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்ய வேண்டும்.

அடுத்த வருடத்திற்குள் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் வழங்கி நிறைவு செய்ய வேண்டும். வெறுமனே நன்கொடையை மாத்திரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், துரிதமாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment