(செ.தேன்மொழி)
வாகன விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வாகன விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் ஒருவர் மாத்திரமே நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனைய நால்வரும் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களாவர்.
அதற்கமைய, நேற்று கஹாத்துட்டுவ பகுதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரான 23 வயதுடைய இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த மற்றுமொரு சிப்பாயும் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, வாகன விபத்தில் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.
மாத்தளை - கண்டி வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் பரிசோதகரை ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து அக்குறணை பகுதிக்குச் சென்ற வேன் ஒன்று மோதிச் சென்றிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் பரிசோதகர் கண்டி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இறுதி கிரியைகள் இன்று பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புடன் இடம்பெறவுள்ளது.
மாத்தளை பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த அசோக்க உபதிஸ்ஸ என்ற உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது வீதிகளிலும் பெருந்தொகையான பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவர்கள் இவ்வாறு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களை பாதுகாப்பது எமது கடமையாகும். மேலும் மழையுடனான காலநிலை நிலவுவதால் அது தொடர்பிலும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment