இலங்கையில் பரவி வரும் திரிபடைந்த கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல : சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

இலங்கையில் பரவி வரும் திரிபடைந்த கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல : சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

(நா.தனுஜா)

நாட்டில் பரவி வரும் திரிபடைந்த கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல. அதனால் திரிபடைந்த புதிய வைரஸ் பரவி வரும் நாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரக் கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன்எலிய வலியுறுத்தியுள்ளார்.

வைத்திய நிபுணர் ரவி ரன்னன்எலிய அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எனினும் இந்த மிகுந்த தாமதத்திற்குப் பின்னரே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இந்தத் தீர்மானம் முன்னரேயே எடுக்கப்பட்டிருந்தால், நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். எனினும் அத்தகையதொரு தீர்மானத்தை மேற்கொள்ளாமலே இருப்பதையும்விட, தாமதமாகவேனும் மேற்கொள்வது சிறந்ததாகும்.

எனினும் தற்போது நாட்டில் பரவி வரும் திரிபடைந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல. அதனால் திரிபடைந்த புதிய வைரஸ் பரவி வரும் நாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

அதேவேளை தனிமைப்படுத்தலில் இருப்பவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை விரைவாக கண்டறிவதற்கு இலங்கையின் பரிசோதனை முறைகள் போதுமானவையாக இல்லை. 

பிரென்டிக்ஸ் கொத்தணியைக் கண்டறிவதற்கு 1 - 2 மாதங்கள் தேவைப்பட்டது. அதேபோன்று பி.1.1.7 என்ற புதிய வைரஸின் பரவலைக் கண்டறிவதற்கு 2 - 3 மாதங்கள் தேவைப்பட்டது. இலங்கையின் பொருளாதாரமும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களும் அபாயத்தில் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment