இலங்கையில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் : தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலைகளாக மாற்றுவது தொடர்பில் அவதானம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

இலங்கையில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் : தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலைகளாக மாற்றுவது தொடர்பில் அவதானம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலைமை அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்கும் இது தொடரும் என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.

இதேவேளை தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதால் தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலைகளாக மாற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாளாந்தம் 22 அல்லது 23 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலையில், கொழும்பு, கம்பஹா, குருணாகல், களுத்துறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் நூற்றுக்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் 8 மாவட்டங்களில் 20 இற்கும் அதிக பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இரவு 10 மணி வரை மாத்திரம் 1531 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 106030 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 95445 பேர் குணமடைந்துள்ளதோடு, 9924 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று ஒரே நாளில் 23730 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரையில் நாட்டில் 2.7 மில்லியன் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

இன்று காலை 7 மணி முதல் திருகோணமலை மாவட்டத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய உப்புவெளி பொலிஸ் பிரிவில் சுமேதங்கபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, திருகோணமலை பொலிஸ் பிரிவில் மட்கோவ், கோவிலடி, லிங்கநகர் உத்தியோகத்தர் பிரிவுகள் , சீனக்குடா பொலிஸ் பிரிவில் கவட்டிகுடா மற்றும் சீனக் குடா ஆகிய உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் குருணாகல், களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, காலி, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய 8 மாவட்டங்களிலும் 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , ஒரு பொலிஸ் பிரிவும் (குளியாப்பிட்டி) , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

5 மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிக தொற்றாளர்கள்

கொழும்பு, கம்பஹா, குருணாகல், களுத்துறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் நூற்றுக்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை கொழும்பில் 228 தொற்றாளர்களும், கம்பஹாவில் 209 தொற்றாளர்களும் , குருணாகலில் 172 தொற்றாளர்களும், மாத்தளையில் 119 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். நேற்று முன்தினம் இனங்காணப்பட்ட 1466 தொற்றாளர்களில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

மத வழிபாட்டு ஸ்தலங்களில் மட்டுப்பாடு

கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு சகல மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் 25 பேருக்கு அதிகமானோரை அனுமதிக்கக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நேரிடும்

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தல் நிலையங்களை வைத்தியசாலைகளாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

எனவே தனிமைப்படுத்தல் வசதிகளை கருத்திற் கொண்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று 6 மரணங்கள் பதிவு

இன்று வியாழக்கிழமை 6 கொவிட் மரணங்கள் பதிவாகின. .இந்நிலையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் 49, 85, 37, 72, 77, 61 வயதானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் கட்டுப்பாடுகள்

உயர் நீதிமன்ற கட்டட தொகுதிக்குள் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளுக்காக சந்தேகநபர்களை மாத்திரம் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad