புதிய அரசியலமைப்பு உருவாகும் சாத்தியமில்லை : கோட்டாபய அரசாங்கமும் சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுவிட்டது - விஜயதாஸ - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

புதிய அரசியலமைப்பு உருவாகும் சாத்தியமில்லை : கோட்டாபய அரசாங்கமும் சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுவிட்டது - விஜயதாஸ

(ஆர்.ராம்)

தற்போதைய அரசியல் சூழமைவுகளின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு சாத்தியமில்லை என்று ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 20 ஆவது திருத்தச் சட்டத்தினை கொண்டுவந்து நிறைவேற்றிக் கொண்டது. அதன் மூலம் ஜனாதிபதி இழந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக் கொண்டார்.

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட வேளையுடன் புதிய அரசியலமைப்பினையும் ஓரிரு மாதங்களுக்குள்ளே நிறைவேற்றிவிட வேண்டும் என்று நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். ஆனால் ஆட்சியாளர்கள் அதில் அக்கறை காட்டியிருக்கவில்லை.

தற்போது ஆளும் தரப்பில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுள்ளன. துண்டுகளாக இயங்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

வெறும் 44 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் தரப்பு காணப்படும்போதே 19ஆவது திருத்தச் சட்டத்தினை சமர்பித்த நான் 215 பேரின் ஆதரவினை பெற்று அதனை நிறைவேற்றியிருந்தேன்.

தற்போதைய அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டும் புதிய அரசியலமைப்பிற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு முனைந்திருக்கவில்லை என்றார்.

அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என்று வினவியபோது, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உத்தேச சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் வரையில் அவ்விதமான ஒரு விடயம் நடைபெறுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர்களான எமக்கு தெரியப்படுத்தப்படாதே இருந்தது.

இவ்வாறுதான் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நடத்தப்படுகின்றனர். ஆகவே தேர்தல் முறைமை தொடர்பில் என்ன செய்யப்போகின்றார்கள் என்று கூற முடியாதுள்ளது என்றார்.

வீரகேசரி

No comments:

Post a Comment