(ஆர்.ராம்)
கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைவாக செயற்படுகின்றபோது வல்லரசுக்களுக்கு இடையிலான மோதல் தளமாக ஒருபோதும் மாற்றமடையாது என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்திற்கான உத்தேச ஆணைக்குழு சட்டமூலமானது அவ்வாறே அமுலாகின்றபோது உலகளவில் உள்ள சீன எதிர்ப்புவாத வல்லாதிக்க சக்திகள் ஓரணியில் திரண்டு அதனை எதிர்க்கும். தமது எதிரியை முதலில் தாக்குதை விடவும் எதிரியியன (சீனாவின்) நண்பனாக இருக்கும் இலங்கையையே அதிகளவில் தாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆகவே எதிர்காலத்தில் பேராபத்துள்ளதாக ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகரினது நிலப்பரப்பிற்கான உரித்தானது இலங்கைக்கே உரியதாகின்றது. அதுபற்றிய கவலைகள் தேவைக்கரியன. ஆரம்பத்தில் மாவட்ட நிருவாகத்தின் கீழ் இருந்த துறைமுக நகரின் உரித்து பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் 2014 இல் ஒப்படைக்கப்பட்டது.
அதனையடுத்து தற்போது அந்த துறைமுக நகரின் அதிகாரத்தினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள ஆணைக்குழுவிடத்தில் கையளிக்கப்படுவதே நோக்கமாகும். இதனால், நில உரித்து பறிபோகாது. அது இலங்கையிடமே காணப்படும்.
மேலும், இந்த துறைமுக நகரானது சீனாவின் முதலீடுகளுக்காக மட்டும் வழங்கப்படமாட்டாது. இங்கு சீனாவை விடவும் ஏனைய நாடுகளும் வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஆகவே எந்தவொரு நாட்டிற்கும் துறைமுக நகரத்தில் முதலீடுகளைச் செய்ய முடியும். அவ்வாறான நிலையில், வல்லரசுகள் எவ்வாறு மோதல்களில் ஈடுபட முடியும்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய வளர்ச்சி வீதம் 2 சதவீதமாக காணப்படுகின்றது. இந்த வளர்ச்சி வீதத்துடன் தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. ஆகவே துறைமுக நகரின் ஊடாக 15 பில்லியன் டொலர்கள் வருமானத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதற்காக அனைத்து நாடுகளையும் முதலீடுகளைச் செய்வதற்கு கவர்ச்சியான வரிச் சலுகைகளை வழங்கவுள்ளோம். அதற்காகவே ஆணைக்குழு சட்ட மூலத்தினை தயாரித்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment