இலங்கைக்கு பெருமை சேர்த்தார் இசுறு குமார - News View

About Us

About Us

Breaking

Monday, April 19, 2021

இலங்கைக்கு பெருமை சேர்த்தார் இசுறு குமார

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் இசுறு குமார ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பளுதூக்கலில் வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் டஷ்கென்ட் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய பளுதூக்கல் வல்லவர் போட்டியில் நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைக்குட்டபட்ட போட்டியில் ஸ்னெட்ச் முறை (104 கி.கி), க்ளீன் அன்ட் ஜேர்க் முறை (137 கி.கி) ஆகிய இரண்டிலுமாக மொத்தமாக 241 கிலோ கிராம் எடையை உயர்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்ற இசுறு குமார, க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 137 கிலோ கிராம் எடையை உயர்த்தி வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

இப்போட்டியில் கஸகஸ்தானின் ச்சொன்டி அஸ்ட்டி 255 கிலோ கிராம் எடையை மொத்தமாக உயர்த்தி தங்கப்பதக்கத்தையும், அவரின் சக நாட்டு வீரரான ஒயெல்கனொவ் அபேஹ் 244 கிலோ கிராம் எடையை உயர்த்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

நான்காமிடம் பெற்றவரை விடவும் ஒரு கிலோ கிராம் எடையை அதிகமாக உயர்த்தியதால் இலங்கையின் இசுறு குமார வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்தார்.

இப்போட்டியின் ஸ்னெட்ச் முறையில் 115 கிலோ கிராம் எடையை உயர்த்திய ச்சொன்டி அஸ்ட்டி தங்கப் பதக்கத்தையும், முதல் முயற்சியில் 108 கிலோ கிராம் எடையை உயர்த்திய உஸ்பெகிஸ்தானின் நபாசொவ் ஒகபெக் வெள்ளிப் பதக்கத்தையும், அதே 108 கிலோ கிராம் எடையை இரண்டாவது முயற்சியில் உயர்த்திய ஒயெல்கனொவ் அபேஹ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கையின் இசுறு குமார 104 கிலோ கிராம் எடையை மாத்திரமே உயர்த்தியிருந்ததுடன், 109 கிலோ கிராம் எடையை உயர்த்த எடுத்த முயற்சியில் தோல்வியடைந்தார்.

இதேவேளை, க்ளீன் அன்ட் ஜேர்க் முறையில் 140 கிலோ கிராம் எடையை உயர்த்திய ச்சொன்டி அஸ்ட்டி தங்கப்பதக்கத்தையும், இசுறு குமார 137 கிலோ கிராம் எடையை உயர்த்தி வெள்ளிப் பதக்கத்தையும், ஒயெல்கனொவ் அபேஹ் 136 கிலோ கிராம் எடையை உயர்த்தி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

கடந்த 16 ஆம் திகதியன்று ஆரம்பமான இப்போட்டித் தொடர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment