அரசை திருப்திப்படுத்த மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விட்ட வடக்கு அதிகாரிகள் - சரவணபவன் - News View

Breaking

Post Top Ad

Saturday, April 3, 2021

அரசை திருப்திப்படுத்த மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விட்ட வடக்கு அதிகாரிகள் - சரவணபவன்

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாதென்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி, பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்.நகர் மத்திய பகுதியிலுள்ள நவீன சந்தையில் தொற்றாளர்கள் சிலர் எழுமாற்றுப் PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டனர். அதையடுத்து நகரின் முக்கிய பகுதி முடக்கப்பட்டுள்ளது. சுமார் 225 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் பணியாற்றும் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 117 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ஆனாலும் மாவட்டச் செயலாளர் அறிவித்த முடக்கப் பகுதிக்குள் அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. எமது உள்ளூர் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன. அதுவும் பண்டிகைக் காலத்தில் எமது வர்த்தகர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் அவர்களின் வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்டு மறுபுறம் பல்தேசிய மற்றும் தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் அதற்கு அண்மித்த பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இது மாத்திரமல்லாமல் திருநெல்வேலி கிராமத்தின் ஒரு பகுதியான பாற்பண்ணை கிராமம் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து முடக்கி வைத்துள்ளனர். ஆனாலும் ‘கண்காணிப்பு வலயம்’ என்ற ஒரு சொல்லாடலைப் பயன்படுத்தி வருகின்றனர். 

முடக்கம் என்று அறிவித்தால் அரசின் 05 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க வேண்டும். அது போதாதென்பது வேறு. ஆனாலும் அந்த நிவாரணத் தொகையை மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதற்காக அல்லது வழங்குவதை தவிர்ப்பதற்காக ‘கண்காணிப்பு வலயம்’ என்று அறிவித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பில் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால், ஒருவரும் பொறுப்பெடுக்கின்றார்கள் இல்லை. பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் யுக்தியையே கையாள்கின்றனர்.

தென்னிலங்கை வர்த்தக நிலையங்களில் தொற்று வராதென்ற அடிப்படையில் அவர்களை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் அதிகாரிகளால் ஏன் உள்ளூர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad