கோத்தாபய ராஜபக்ஷ ஈஸ்டர் தாக்குதலால் ஜனாதிபதியாகவில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

கோத்தாபய ராஜபக்ஷ ஈஸ்டர் தாக்குதலால் ஜனாதிபதியாகவில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலே கோத்தாபய ராஜபக்ஷவை நாட்டின் ஜனாதிபதியாக்கியதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித ஆயத்தமும் இருக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி, விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் அதள பாதாலத்தை நோக்கிச் சென்றதுடன், சுற்றுலாத்துறையும் வீழ்ச்சி கண்டிருந்தது. இனங்களுக்கு இடையில் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலையும் உருவானது.

ஒட்டு மொத்தமாக சமூகத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரிய அழிவு ஏற்பட்டது. இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஏனைய தேர்தல்கள் குறித்தும் கருத்தாடல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

புதிய அரசாங்கம் அமையவும் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமென எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட, சஹ்ரானின் தாக்குதல் அவசியமில்லை.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் காணப்பட்ட பொறுத்தமற்ற கொள்கை வேறுபாடுகள், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமூக எழுச்சி, தேசியப் பாதுகாப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிகளே காரணம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad